கிரிக்கெட்

இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி - கான்பூரில் இன்று தொடக்கம் + "||" + The first Test between India and New Zealand starts today in Kanpur

இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி - கான்பூரில் இன்று தொடக்கம்

இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி - கான்பூரில் இன்று தொடக்கம்
இந்தியா-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்குகிறது.
கான்பூர், 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று தொடங்குகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுக வீரராக இடம் பெறுகிறார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இந்திய கேப்டன் விராட் கோலி முதலாவது டெஸ்டில் மட்டும் ஆடவில்லை. ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு டெஸ்ட் தொடரில் முழுமையாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் கடைசி நேரத்தில் விலகினார். இதனால் 2-ம் தர இந்திய அணியே களம் இறங்குகிறது. பேட்டிங்கில் கேப்டன் ரஹானே, துணை கேப்டன் புஜாரா மட்டுமே அனுபவசாலிகள். ஆனால் சொந்த மண்ணில் நடப்பது சாதகமான அம்சமாகும்.

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் 26 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கிறார். அவர் அறிமுக வீரராக இடம் பெறுவதை உறுதிப்படுத்திய பொறுப்பு கேப்டன் அஜிங்யா ரஹானே, ஆடும் லெவன் அணி பட்டியல் குறித்து தெரிவிக்க மறுத்து விட்டார். தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், சுப்மான் கில்லும் ஆடுகிறார்கள். இவர்கள் சிறப்பான அடித்தளம் அமைத்து தந்தால் பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.

இந்திய ஆடுகளங்களில் எப்போதும் சுழற்பந்து வீச்சின் தாக்கமே பிரதானமாக இருக்கும். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் 3-வது சுழற்பந்து வீச்சாளராக அக்‌ஷர் பட்டேல் இடம் பெறுவார் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச்சில் உள்ளூரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அக்‌ஷர் பட்டேல் 27 விக்கெட்டுகள் கபளீகரம் செய்து மிரட்டினார். இதில் ஒரு டெஸ்டில் இங்கிலாந்தை வெறும் 2 நாளில் காலி செய்தனர். அந்த அளவுக்கு ஆடுகளம் சுழலின் சொர்க்கபுரியாக தென்பட்டது. இந்த ஆடுகளமும் தொடக்கத்தில் பேட்டிங், போக போக சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அஸ்வின் இன்னும் 5 விக்கெட் எடுத்தால், அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள ஹர்பஜன்சிங்கை (417 விக்கெட்) பின்னுக்கு தள்ளிவிடுவார்.

கேப்டன் ரஹானே இந்த ஆண்டில் 19 இன்னிங்சில் விளையாடி 2 அரைசதம் உள்பட 372 ரன்கள் (சராசரி 19.57) மட்டுமே எடுத்துள்ளார். அவரது மோசமான ஆட்டம் கவலைக்குரிய விஷயமாகும். இந்த தொடரில் மட்டும் அவர் போதுமான ரன்வேட்டை நடத்தாவிட்டால் அடுத்து வரும் தென்ஆப்பிரிக்க தொடரில் அவருக்கு இடம் கிடைப்பது கேள்விக்குறியாகி விடும்.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையிலும் இந்த டெஸ்ட் முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளிகளும், டிராவுக்கு 4 புள்ளியும் வழங்கப்படும். முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் கோப்பையை கோட்டை விட்ட இந்திய அணிக்கு அதற்கு பதிலடி கொடுக்க இது சரியான சந்தர்ப்பமாகும்.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் வலுவானது தான். டிவான் கான்வே, டிரென்ட் பவுல்ட் இல்லாவிட்டாலும் ராஸ் டெய்லர், டாம் லாதம், டிம் சவுதி என்ற தரமான வீரர்கள் உள்ளனர். கேப்டன் வில்லியம்சன் அவர்களின் பேட்டிங் முதுகெலும்பாக உள்ளார். அந்த அணியும் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் காண திட்டமிட்டுள்ளது. அஜாஸ் பட்டேல், வில்லியம் சோமர்வில் ஆகியோருடன் 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு மிட்செல் சான்ட்னெர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடிய நியூசிலாந்து அணிக்கு, எல்லாவிதமான சூழலிலும் தாங்கள் சிறந்த அணி என்பதை நிரூபிப்பதற்கு இது இன்னொரு அரிய வாய்ப்பாகும்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பது இது 12-வது நிகழ்வாகும். ஆனால் ஒரு முறையும் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. 9 முறை தொடரை இழந்துள்ள அந்த அணி 2 தொடரை ‘டிரா’ செய்திருக்கிறது. இந்திய மண்ணில் 34 டெஸ்டுகளில் விளையாடி அதில் 2-ல் மட்டுமே (1969 மற்றும் 1988-ம் ஆண்டு) நியூசிலாந்து வெற்றி பெற்றிருக்கிறது. அதாவது இந்தியாவில் டெஸ்டில் வெற்றியை ருசித்து 33 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் வேட்கையுடன் நியூசிலாந்து அணி வியூகங்களை தீட்டியுள்ளது.

போட்டி நடக்கும் கான்பூர் மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 22 டெஸ்டுகளில் இந்தியா 7-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும், 12-ல் டிராவும் கண்டுள்ளது. நியூசிலாந்து அணி இங்கு இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்டில் ஆடி அதில் 2-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது. இந்தியா இந்த ஸ்டேடியத்தில் 3 முறை 600 ரன்களுக்கு மேல் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா அல்லது முகமது சிராஜ்.

நியூசிலாந்து: டாம் லாதம், வில்லியம் யங், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளன்டெல், மிட்செல் சான்ட்னெர் அல்லது கைல் ஜாமிசன், டிம் சவுதி, நீல் வாக்னெர், சோமர்வில், அஜாஸ் பட்டேல்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

சாதனை புள்ளி விவரம்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 60 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் இந்தியாவும், 13-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. 26 போட்டிகள் ‘டிரா’ வில் முடிந்தது. இவற்றில் இருந்து சில சாதனை புள்ளி விவரங்கள் வருமாறு:-

அணி அதிகபட்சம்: நியூசிலாந்து 680/8 டிக்ளேர் (வெலிங்டன், 2014), இந்தியா: 583/7 டிக்ளேர் (ஆமதாபாத், 1999)

குறைந்தபட்சம்: இந்தியா-81 ரன் (வெலிங்டன், 1976), நியூசிலாந்து-94 ரன் (ஹாமில்டன், 2002)

அதிக ரன்கள் குவித்தோர்: ராகுல் டிராவிட் (இந்தியா)- 1,659 ரன் (15 டெஸ்ட்), பிரன்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)- 1,224 ரன் (10)

தனிநபர் அதிகபட்சம்: பிரன்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)-302 ரன் (வெலிங்டன், 2014), வினோ மன்கட் (இந்தியா)-231 ரன் (சென்னை, 1956)

அதிக விக்கெட் வீழ்த்தியோர்: ரிச்சர்ட் ஹாட்லீ (நியூசிலாந்து)- 65 விக்கெட் (14), பிஷன்சிங் பெடி (இந்தியா)-57 விக்கெட் (12).

ரஹானே சொல்வது என்ன?

இந்திய பொறுப்பு கேப்டன் ரஹானே கூறுகையில், ‘லோகேஷ் ராகுல் நல்ல பார்மில் இருந்தார். காயத்தால் அவர் விலகியிருப்பது பின்னடைவு தான். ஆனால் அவரது இடத்தை நிரப்புவதற்கு நம்மிடம் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இந்திய ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்கு உகந்த வகையிலேயே இருக்கும். பந்து வேகமின்றி (ஸ்லோ) அதிகம் எழும்பாமல் வரும். அந்த வகையிலேயே இந்த ஆடுகளமும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இப்போது நாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருக்கிறோம். எனவே உள்ளூர் ஆடுகளத்தன்மையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம்’ என்றார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில்.‘இந்தியாவின் சுழற்பந்து வீச்சு சவாலை சமாளிக்க நாங்கள் வேறு விதமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். தொடர் முழுவதும் சுழற்பந்து வீச்சின் தாக்கம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பந்து அதிகமாக சுழன்று திரும்பும். அடுத்த பந்து திடீரென நேராக ஸ்டம்பை நோக்கி வரும். அதற்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடக்கம்
இந்தியா-நியூசிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது.
2. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் : 2ம் இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான்
வங்காளதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
3. வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் :8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: ஹர்பஜன் சிங்கை முந்தினார் அஸ்வின்.!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளரானார் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின்.
5. 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி; பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157-ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.