நகர்ப்புற ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை - அமைச்சர் அறிவிப்பு


நகர்ப்புற ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை - அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Nov 2021 11:13 PM GMT (Updated: 25 Nov 2021 12:41 AM GMT)

தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சில ரேஷன் கடைகளில் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறி குறிப்பாக தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்தி மலிவு விலையில் தரமான காய்கறி மற்றும் தக்காளி கிடைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கூட்டுறவுத் துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் ஒரு கிலோ தக்காளி குறைவான விலையில் விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 டன் தக்காளி மற்றும் இதர காய்கறி கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24-ந்தேதி (நேற்று) மதியம் வரை 8 டன் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விலை பட்டியல்

அதன்படி, ஒரு கிலோ தக்காளி ரூ.79 (ரூ.100), உருளைக்கிழங்கு ரூ.38 (ரூ.45), வெண்டைக்காய் ரூ.70 (ரூ.80), சுரைக்காய் ரூ.43 (ரூ.45), பீட்ரூட் ரூ.40 (ரூ.45), பீன்ஸ் ரூ.70 (ரூ.71), கோஸ் ரூ.28 (ரூ.40), கொத்தமல்லி ரூ.15 (ரூ.18), புதினா ரூ.4 (ரூ.6), பச்சை மிளகாய் ரூ.32 (ரூ.40), கத்தரிக்காய் (வரி) ரூ.65 (ரூ.70), கத்தரிக்காய் (உ) - ரூ.68 (ரூ.72), சவுசவ் - ரூ.20 (ரூ.30), நூக்கல் ரூ.42 (ரூ.50), வெள்ளரிக்காய் ரூ.15 (ரூ.20), முருங்கைக்காய் ரூ.110 (ரூ.121) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் அடைப்புக்குறிக்குள் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும் விலை வெளிச்சந்தை விலை ஆகும்.

அரசின் நடவடிக்கையால் நேற்று (நேற்று முன்தினம்) வரை வெளிச்சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.150 என்று விற்கப்பட்ட நிலையில், இன்று (நேற்று) ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரையிலும், இதர காய்கறிகள் விலையும் வெளிச்சந்தையில் கணிசமாகவும் குறைந்துள்ளது.

ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளிலும் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மக்கள் ஆர்வம்

சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சை, நெல்லை, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 65 பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.

ஒரு கிலோ தக்காளி ரூ.79-க்கு கிடைப்பதால் மக்கள் போட்டிபோட்டு கொண்டு தக்காளியை வாங்கி செல்கிறார்கள். இதனால் தக்காளி வேகவேகமாக விற்றுத்தீர்ந்து விடுகிறது.

தற்காலிக விலை உயர்வு

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கன மழை பெய்கிறது. தக்காளி அதிகம் விளையும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடைபட்டிருப்பது, மழை காரணமாக தக்காளி பறிக்கும் சூழல் இல்லாமை போன்ற காரணங்களால் தக்காளி விலை உயர்வு தற்காலிகமாக ஏற்பட்டு உள்ளது. இது நிரந்தரமானது அல்ல.

மழை இல்லாத மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வரத்து அதிகரிப்பு

தற்போது 600 டன் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துக்கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 480 டன் தக்காளி வந்தது. தற்போது தக்காளியின் வரத்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story