3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல்


3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல்
x
தினத்தந்தி 25 Nov 2021 12:00 AM GMT (Updated: 25 Nov 2021 12:00 AM GMT)

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா 29-ந் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதுடெல்லி, 

விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், விவசாயிகளுக்கு (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களை மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்தது.

இந்த சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு கூறினாலும் அதை விவசாயிகள் ஏற்கவில்லை. இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை என ஒருமித்த குரலில் கூறி, அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு ஓராண்டு காலமாக போராடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான அரசியல் சாசன செயல்முறை செய்து முடிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலைமையை மேம்படுத்துவதற்காக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தும், அதன் முக்கியத்துவத்தை (போராடும்) சில விவசாயிகளுக்கு விளக்குவதற்கு தங்களால் முடியாமல் போய்விட்டதாகவும், அதனால் திரும்பப்பெறுவதாகவும் கூறினார். போராடும் விவசாயிகள் உடனடியாக வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான நடைமுறைகள் நடந்து முடியும் வரையில் போராட்டம் தொடரும் என போராடும் விவசாயிகள் அறிவித்தனர். அத்துடன் போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நாடாளுமன்றம் நோக்கி 29-ந் தேதி பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா-2021-க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதா வரும் 29-ந் தேதி தொடங்குகிற நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தாக்கலாகிறது.

இந்த தகவல்களை மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர், மத்திய மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் தெரிவித்தார். கூட்டத்தின் தொடக்க நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா, மக்களவையில் தாக்கலாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் அவதிப்படும் ஏழை, எளியோருக்கு ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்குவதற்கான ‘பிரதம மந்திரி காரிப் கல்யாண் அன் யோஜனா’ திட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு (டிசம்பர்-2021 முதல் மார்ச் 2022 வரை) நீட்டிக்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தின்கீழ் சுமார் 80 கோடி ஏழை மக்களுக்கு மாதம்தோறும் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். இந்த திட்டத்தின் 5-ம் கட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் உணவு தானியங்களுக்கு ரூ.53 ஆயிரத்து 344 கோடியே 52 லட்சம் மானியம் வழங்கப்படும். இந்த நிதியில் 1 கோடியே 63 லட்சம் டன் உணவு தானியம் இலவசமாக வினியோகிக்கப்படும். ஏற்கனவே 4 கட்டங்களாக ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் கோடி மதிப்பில் 6 கோடி டன் உணவு தானியங்கள் வினியோகிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Next Story