பிணவறையில் வைக்கப்பட்டவர் உயிருடன் வந்தார்.5 நாட்கள் சிகிச்சைக்குப் பின் உயிரிழப்பு


பிணவறையில் வைக்கப்பட்டவர் உயிருடன் வந்தார்.5 நாட்கள் சிகிச்சைக்குப் பின் உயிரிழப்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 10:12 AM GMT (Updated: 25 Nov 2021 10:14 AM GMT)

இறந்ததாக பிணவறையில் வைக்கப்பட்டவர் 7 மணி நேரத்திற்கு பின் உயிருடன் வந்தார். 5 நாட்கள் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார்.

புதுடெல்லி

கிழக்கு டெல்லியின் மொராதாபாத்தில்  நவம்பர் 18 அன்று  ஸ்ரீகேஷ் குமார் ( 40 ) என்பவர்  மோட்டார் சைக்கிளில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீகேஷ் குமார்  மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்து விட்டனர். உடனடியாக  மறுநாள் பிரேத பரிசோதனை செய்வதற்காக அவர் உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.  அங்கு 7 மணி நேரத்திற்கும் அதிகமாக  அங்கு  அவர் உடல் வைக்கப்பட்டு இருந்தது.

உடலை அடையாளம் காண ஸ்ரீகேஷின் மைத்துனர்  வரவழைக்கப்பட்டார். அவர் பிணவறைக்கு சென்று பார்த்த போது ஸ்ரீகேஷின் உடலில் அசைவைக் கண்டார். உடனடியாக இது குறித்து டாக்டர்களுக்கு அவர்  தகவல் தெரிவித்தார்.

உடனடியாக  டாக்டர்கள்  அவரை அவசர பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு அவருக்கு 5 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் 5 நாட்களுக்குப் பிறகு  சிகிச்சை பலனின்றி ஸ்ரீகேஷ் குமார் மரணமடைந்தார்.

கடந்த செவ்வாய்கிழமை அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவரது மரணம் குறித்து  அவரது சகோதரர் சத்யானந்த் கவுதம், கூறும் போது எனது சகோதரர் உயிருக்கு போராடினார் அவர் வாழ விரும்பினார். ஆனால் 5 நாட்கள்  சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்து உள்ளார்.'நாங்கள் அவரது பெயரை கூப்பிடும்போதெல்லாம் அவர் பதிலளித்ததால் அவர் குணமடைவதற்கான அறிகுறிகள் இருந்தது. ஆனால், அவருக்கு மூளையில் ரத்த உறைவு இருந்தது. அவரது மரணத்திற்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைப்போம் என்று சத்யானந்த் கூறினார்.

இது குறித்து மொரதாபாத் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷிவ் சிங் கூறியதாவது: -

அவசர மருத்துவ அதிகாரி நோயாளியை அதிகாலை 3 மணிக்கு பார்த்தார், இதயத்துடிப்பு இல்லை.ஆனால் காலையில் ஒரு போலீஸ் குழுவும் அவரது குடும்பத்தினரும் அவர் உயிருடன் இருப்பதாக கூறினர். இதனை டாக்டர்கள் அலட்சியம் என்று கூற முடியாது. இது ஒரு அரிதான சம்பவம் என கூறினார்.

இத சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story