தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி: மத்திய அரசு ஒதுக்கியது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Nov 2021 7:28 PM GMT (Updated: 25 Nov 2021 7:28 PM GMT)

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

புதுடெல்லி, 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடியை இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்துக்கான ஊதியம் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு நிதியை விடுவிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த திட்டத்துக்காக எப்போதெல்லாம் கூடுதல் நிதி தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் மத்திய நிதியமைச்சகத்தின் மூலம் தேவையான நிதி பெறப்பட்டு வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த 2020-21-ம் நிதியாண்டிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.61,500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிலையில், பின்னர் ரூ.1.11 லட்சம் கோடியாக இந்த நிதி மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story