குளிர்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு


குளிர்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு
x
தினத்தந்தி 28 Nov 2021 9:17 AM GMT (Updated: 28 Nov 2021 9:57 AM GMT)

டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மூன்று புதிய வேளாண் சட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்வதாக அறிவித்தார்.  டெல்லியில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில்,  டெல்லியில் ராஜ்நாத் சிங்  தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை  நடத்தப்பட்டது.   மேலும் வேளாண் சட்டங்கள் ரத்து, குறைந்தபட்ச ஆதாரவிலை போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

அனைத்துகட்சி கூட்டம் முடிந்த பின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினைகள் மற்றும் கொரோனா உள்ளிட்ட பல பிரச்சினைகள் இன்று அனைத்து கட்சி கூட்டத்தில் எழுப்பப்பட்டன. எம்எஸ்பியை உறுதி செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன என்றார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் பாராளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் நிறைவடைந்தது

இதற்கிடையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி நாளை காங்கிரஸ் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறது. 

காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Next Story