ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல்


ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல்
x
தினத்தந்தி 28 Nov 2021 6:46 PM GMT (Updated: 28 Nov 2021 6:46 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரும் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து, ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரியும் வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கமான நீதிமன்ற செயல்பாடுகளின்படி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் அறிவித்தது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரும் மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு உளளதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. கடந்த 25-ந் தேதி மட்டும் 306 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் ஆலையில் பிரதான எந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்டுமான அமைப்புகள், எந்திரங்கள் துருப்பிடித்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் அளவில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு ஆலையை அவ்வப்போது பார்வையிட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிகமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கக்கோரி அளிக்கப்பட்ட 19 கோரிக்கை மனுக்கள் மீது தமிழக அரசு எந்த பதிலையும் இதுவரை அளிக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலை நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் சீல் வைக்கப்பட்டுள்ளதால் அமில கசிவு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யாவிட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

1995-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, அவ்வப்போது நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு ஆலையின் மதிப்பு தற்போது ரூ.3,630 கோடியாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை 4 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 20 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கி வந்தது.

நாட்டின் 36 சதவீத தாமிர தேவையை ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்து வந்தது. ஆலை மூடப்பட்டதால் 18 ஆண்டுகளுக்குப்பின், தாமிரத்தை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. எனேவ ஸ்டெர்லைட் ஆலை தெடர்பான மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story