நாடாளுமன்றத்தில் இன்று சூரியன் உதயமாகிறது...!! ராகுல் காந்தி கருத்து


நாடாளுமன்றத்தில் இன்று சூரியன் உதயமாகிறது...!! ராகுல் காந்தி கருத்து
x

நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பெயரில் இன்று சூரியன் உதயமாக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

வேளாண் துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராடி வருகிறார்கள்.

இதற்கிடையே, கடந்த 19-ந் தேதி டெலிவிஷனில் உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து விட்டது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. டிசம்பர் 23-ந் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கூட்டத்தொடர் நடக்கிறது.

கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பெயரில் இன்று சூரியன் உதயமாக உள்ளதாக ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தனர். இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Next Story