“நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி” - வானிலை ஆய்வு மையம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Nov 2021 7:59 AM GMT (Updated: 29 Nov 2021 7:59 AM GMT)

நாளை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், வட கடலோர மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாளை (30-11-2021) தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், “சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது வரை 113 செ.மீ. மழை பெய்துள்ளது; நாளை முதல் சென்னையில் மழை குறைய வாய்ப்புள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் சென்னையில் 91 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குமரி தென்கிழக்கு வங்க கடல், கேரளக் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்” என்று அவர் தெரிவித்தார். 

Next Story