தமிழகத்தில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மத்தியக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் - ஜி.கே. வாசன்


தமிழகத்தில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மத்தியக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் - ஜி.கே. வாசன்
x
தினத்தந்தி 30 Nov 2021 6:45 AM GMT (Updated: 30 Nov 2021 6:45 AM GMT)

தமிழகத்தில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மத்தியக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து மத்தியக்குழு கடந்த 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ஆய்வு செய்தது. மத்திய அரசின் 7 பேர் கொண்ட குழு இரண்டு குழுக்களாக பிரிந்து 11 மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்தது.

இந்த குழு மேற்கொண்ட ஆய்வுகள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து பேரிடம் நிதி ஒதுக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய குழு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு டெல்லி திரும்பிய சில நாட்களில் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்தது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இதில், மாநிலங்களவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜி.கே. வாசன் பங்கேற்றார். அப்போது, தமிழகத்தில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மத்தியக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவை மூலம் மத்திய அரசுக்கு அவர் வலியுறுத்தினார்.   

Next Story