உலக செய்திகள்

இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மீதான செக்ஸ் புகாரில் விசாரணை - அமெரிக்க கோர்ட்டு உத்தரவு + "||" + Inquiry into sex complaint against Prince Andrew of England - US court order

இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மீதான செக்ஸ் புகாரில் விசாரணை - அமெரிக்க கோர்ட்டு உத்தரவு

இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மீதான செக்ஸ் புகாரில் விசாரணை - அமெரிக்க கோர்ட்டு உத்தரவு
இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ, தன் மீதான செக்ஸ் புகாரில் விசாரணையை சந்தித்தாக வேண்டும் என்று அமெரிக்க கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நியூயார்க்,

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன், இளவரசர் ஆண்ட்ரூ (வயது 61). இவர் 1986-ம் ஆண்டு, சாரா பெர்குசனை மணந்தார். இந்த தம்பதியருக்கு 2 மகள்கள். ஆனால் 10 ஆணடு கால மண வாழ்க்கை கசந்து போனது. 1996-ம் ஆண்டு மே மாதம் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில், 2001-ம் ஆண்டு, இவர் வர்ஜீனியா கியூப்ரே என்ற 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண் தரப்பில் நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.ஆனால், பாலியல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட அமெரிக்க பைனான்சியர் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் வர்ஜீனியா கியூப்ரே 2009-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி, தன் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இளவரசர் ஆண்ட்ரூ தரப்பில் நியூயார்க் நகர கோர்ட்டில் முறையிடப்பட்டது. தவிரவும் தன் மீதான குற்றச்சாட்டை இளவரசர் ஆண்ட்ரூ எப்போதுமே மறுத்து வந்தார். ஆனால் பக்கிங்ஹாம் அரண்மனையோ, நடந்து கொண்டிருக்கிற வழக்கு விசாரணையில் கருத்து எதுவும் தெரிவிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டது.

இந்த நிலையில் இளவரசர் ஆண்ட்ரூ தன்மீதான பாலியல் பலாத்கார வழக்கில் விசாரணையை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்று நியூயார்க் நகர கோர்ட்டின் நீதிபதி லெவிஸ் ஏ கப்லான் 46 பக்க உத்தரவு ஒன்றை நேற்று முன்தினம் பிறப்பித்தார்.இந்த உத்தரவில் இளவரசர் ஆண்ட்ரூ மீதான பாலியல் பலாத்கார புகாரை தள்ளுபடி செய்ய முடியாது என்று நீதிபதி நிராகரித்து விட்டார். அதே நேரத்தில் தனது உத்தரவு, இளவரசர் ஆண்ட்ரூ மீதான வர்ஜீனியா கியூப்ரே புகார் உண்மையானது என்றோ, பொய்யானது என்றோ தீர்மானிக்கவில்லை என்று கூறி உள்ளார்.

இந்த உத்தரவினால் நியூயார்க் கோர்ட்டில் தன் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை இளவரசர் ஆண்ட்ரூ சந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே நேரத்தில் இளவரசர் ஆண்ட்ரூமீது பாலியல் பலாத்கார புகாரை தாக்கல் செய்துள்ள வர்ஜீனியா கியூப்ரே, “இந்த வழக்கை தள்ளுபடி செய்ய இளவரசர் ஆண்ட்ரூ மேற்கொண்ட முயற்சி நிராகரிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு எதிரான எனது புகார் குறித்து இப்போது ஆதாரம் எடுத்துக்கொள்ளப்படும்” என கூறினார்.

இளவரசர் ஆண்ட்ரூ, 2019-ம் ஆண்டு பி.பி.சி.க்கு அளித்த ஒரு பேட்டியில், “வர்ஜீனியா கியூப்ரேயை சந்தித்ததாக எனக்கு நினைவில் இல்லை, அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அவருடன் நான் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதும் இல்லை” என கூறியது நினைவுகூரத்தக்கது.