மாநில செய்திகள்

டெல்லி அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தினவிழாவில் இடம்பெறும் + "||" + Denied opportunity in Delhi parade: Tamil Nadu decorative vehicle will feature in Chennai Republic Day celebrations

டெல்லி அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தினவிழாவில் இடம்பெறும்

டெல்லி அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தினவிழாவில் இடம்பெறும்
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
சென்னை,

டெல்லியில், ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தின் போது, நடைபெறும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில், தமிழக அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு நடக்க இருக்கும் குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் இடம்பெறாது என்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருந்தார். அதில், உடனடியாக பிரதமர் தலையிட்டு தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று பதில் அனுப்பி இருந்தார்.

பிரதமருக்கு கடிதம்

அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பானது, இந்த ஆண்டு ‘இந்தியா 75' என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் இடம்பெற வேண்டி, விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில், அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வுக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, 3 முறை அவர்கள் கூறிய திருத்தங்களைச் செய்தோம். 4-வது கூட்டத்திற்கு எந்தவொரு காரணமும் இன்றி அழைக்காமல், அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு, தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்த எனது வருத்தத்தை நேற்று பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். இன்று கிடைக்கப்பெற்ற மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியின் கடிதத்தில், எந்தவித காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

250 ஆண்டு கால பங்களிப்பு

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் சற்றும் சளைக்காத வகையில், விடுதலைப்போரில் தமிழகம் செய்த 250 ஆண்டு காலத் தொடர் பங்களிப்பு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாகும். முதல் இந்திய சுதந்திரப் போர் என போற்றப்படும் சிப்பாய் புரட்சிக்கு (1857) அரை நூற்றாண்டுக்கு முன்பே நடந்தேறிய வேலூர் புரட்சி ஆங்கிலேய வல்லாதிக்க எதிர்ப்பு வரலாற்றில் முக்கிய தொடக்கமாகும். அதேபோல், ஜான்சிராணி வாள் வீசுவதற்கு ¾ நூற்றாண்டுக்கு முன்பே, ஆங்கிலேயர்களைத் தீவிரமாக எதிர்த்துப் போரிட்டு, தான் இழந்த நாட்டை வென்ற ஒரே ராணி என்ற புகழைப் பெற்றவர் வீரத்தாய் வேலுநாச்சியார்.

ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக பலமுறை போரிட்ட பூலித்தேவன், ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிரான போரில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்ட எண்ணிலடங்கா வீரத்திருமகன்களை விடுதலைத் தியாகத்திற்கு தந்த மண் தமிழ்நாடாகும்.

மாநில அரசின் விழாவில் பங்கேற்கும்

ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கு போட்டியாக, சுதேசி கப்பல் கம்பெனி எனும் பெரும் கனவை நெஞ்சில் ஏந்தி, தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழந்து, ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகச் செயல்பட்டு இரட்டைத் தீவாந்திர தண்டனை பெற்றவர் வ.உ.சிதம்பரனார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தனது வீரமிக்க கவிதைகளால் விடுதலை வேள்வி செய்தவர் பாரதியார். இத்தகைய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூரும் விதமாகத்தான் நமது அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டுப் பற்றிலும், விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும்.

மேலும், சமீபத்தில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற புகைப்படக் கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு...!
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
2. நித்யானந்தாவுக்கு என்ன ஆச்சு? ‘‘சாகவில்லை... சமாதி நிலையில் இருக்கிறேன்’’ என அறிவிப்பு
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சாமியார்களில் நித்யானந்தாவும் ஒருவர். பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக வீடியோ காட்சி வெளியானபோது மிகவும் பிரபலமாக பேசப்பட்டார் நித்யானந்தா.
3. சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைக்கவும், தமிழை வழக்காடு மொழியாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
4. ராஜபக்சேக்கள் இல்லாத இளம் அமைச்சரவையை நியமிப்பேன்: கோத்தபய அறிவிப்பு
இலங்கையில் ராஜபக்சேக்கள் இல்லாத இளம் அமைச்சரவையை நியமிப்பேன் என கோத்தபய ராஜபக்சே அறிவித்து உள்ளார்.
5. இரவு ரோந்து செல்லும் போலீசாருக்கு மாதம் ரூ.300 சிறப்புப்படி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாளைக்கு ஒருமுறை விடுப்பு வழங்கப்படும் என்றும், இரவு ரோந்து செல்லும் போலீசாருக்கு மாதம் ரூ.300 சிறப்புப்படி வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.