குடியரசு தின விழா அணிவகுப்பின் போது டிரோன் விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜபால்பூர்,
மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் உள்ள ஸ்டேடியத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ஊர்திகளின் அணிவகுப்பை தலைவர்கள் பார்வையிட்டனர்.
அப்போது, வேளாண்துறையின் அலங்கார ஊர்தி சென்றுகொண்டிருந்தபோது, அதற்கு மேல் பறந்துகொண்டிருந்த டிரோன் திடீரென கீழே விழுந்தது. இதில், பார்வையாளர் பகுதியில் இருந்த இந்து குஞ்சம் (வயது 38), கங்கோத்தி குஞ்சம் (வயது 18) ஆகியோரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக வேளாண் துறை அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.