கர்ப்பிணிகளை பணியில் சேர்க்க முடியாது: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை ரத்து செய்த எஸ்பிஐ..! + "||" + SBI suspends controversial circular on recruitment regarding pregnant women
கர்ப்பிணிகளை பணியில் சேர்க்க முடியாது: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை ரத்து செய்த எஸ்பிஐ..!
3 மாத கர்ப்பிணிகளை பணியில் சேர்க்க முடியாது என வெளியிட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கைக்கு பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில் அதை எஸ்பிஐ ரத்து செய்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்.பி.ஐ வங்கி , 3 மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் வேலையில் சேர்வதற்கு தற்காலிக தகுதியற்றவர்கள் என சுற்றறிக்கை வெளியிட்டது. இந்த சுற்றறிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
எஸ்.பி.ஐ வங்கியின் இந்த உத்தரவு பாரபட்சமானது, சட்டத்திற்கு புறம்பானது. சட்டம் வழங்கும் மகப்பேறு சலுகைகள் பாதிக்கும் வகையில் உள்ளது என டெல்லி மகளிர் ஆணையம் தலைவர் ஸ்வாதி மலிவால் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும் எஸ்பிஐ வங்கியின் இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, 3 மாத கர்ப்பிணிகளை பணியில் சேர்க்க முடியாது என வெளியிட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரத்து செய்துள்ளது.
இது குறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் " பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை கைவிடவும், இந்த விஷயத்தில் ஏற்கனவே உள்ள வழிமுறைகளை தொடரவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.