துருக்கியில் பயங்கர குண்டு வெடிப்பு 13 ராணுவ வீரர்கள் கொன்று குவிப்பு


துருக்கியில் பயங்கர குண்டு வெடிப்பு 13 ராணுவ வீரர்கள் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2016 12:15 AM GMT (Updated: 2016-12-18T03:06:28+05:30)

குண்டு வெடிப்பால் பஸ் தீப்பிடித்து எரிந்து, உருக்குலைந்து காணப்படுவதையும், பலதரப்பினரும் கூடி வந்து நிற்பதையும் படத்தில் காணலாம். அங்காரா, துருக்கியில் நடந்த பயங்கர கு

குண்டு வெடிப்பால் பஸ் தீப்பிடித்து எரிந்து, உருக்குலைந்து காணப்படுவதையும், பலதரப்பினரும் கூடி வந்து நிற்பதையும் படத்தில் காணலாம்.

அங்காரா,

துருக்கியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 13 ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

குர்து இனப்போராளிகள்

துருக்கியில் சமீப காலமாக குர்து இனப்போராளிகளும், பிற அமைப்பினரும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பாதுகாப்பு படையினரையும், போலீசாரையும் குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இஸ்தான்புல் நகரத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் போட்டி ஒன்றின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கிருந்து பஸ்சில் புறப்பட்டபோது, அந்த பஸ் மீது கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அந்த சுவடு மறைவதற்கு முன், அங்குள்ள கய்சேரி நகரில் நேற்று மற்றொரு குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

பயங்கர குண்டு வெடிப்பு

துருக்கி ராணுவ வீரர்கள் பணிமுடித்து விட்டு வார விடுமுறைக்காக நேற்று ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ்சில் பொதுமக்களும் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் அந்த பஸ், கய்சேரி நகரில் எர்சியெஸ் பல்கலைக்கழகத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வெடிகுண்டுகளை நிரப்பி வந்த ஒரு கார், அந்த பஸ் மீது பயங்கரமாக மோதி வெடித்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியே குலுங்கியது. பெருமளவில் புகை மண்டலம் உருவானது. குண்டுகள் வெடித்ததின் நிமித்தமாக பஸ் தீப்பிடித்து எரிந்தது. அந்தப் பஸ்சில் இருந்த ராணுவ வீரர்கள் அலறித்துடித்தனர்.

13 வீரர்கள் பலி

தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். மீட்புப்பணிகளை முடுக்கி விட்டனர்.

இந்த குண்டுவெடிப்பில் 13 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகளில் எடுத்துச்செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இருப்பினும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

தடை

இந்த குண்டுவெடிப்பு பற்றி துருக்கி துணைப் பிரதமர் வேய்சி கய்நாக் கூறுகையில், “நாட்டின் மத்திய நகரமான கய்சேரியில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது கார் குண்டுதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சமீபத்தில் இஸ்தான்புல் நகர கால்பந்து மைதானத்துக்கு வெளியே நடத்தப்பட்ட தாக்குதல் பாணியில் நடத்தப்பட்டிருக்கிறது” என்றார்.

இதற்கிடையே குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் இருந்து நேரடி ஒளிபரப்பு நடத்துவதற்கு டி.வி. நிறுவனங்களுக்கு தடை விதித்து வானொலி, தொலைக்காட்சி சுப்ரீம் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சம்பவ இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து விசாரணை நடத்துகின்றனர்.

Next Story