ஜோர்டான் நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜோர்டான் நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 19 Dec 2016 9:00 PM GMT (Updated: 19 Dec 2016 8:48 PM GMT)

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஜோர்டான் நாட்டின் தென் பகுதியில் உள்ள கராக் பிராந்தியத்தின் தலைநகர் கராக். புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இங்கு வரலாற்று சிறப்பு மிக்க சிலுவைப்போர் கோட்டை உள்ளது.

அம்மான்,

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஜோர்டான் நாட்டின் தென் பகுதியில் உள்ள கராக் பிராந்தியத்தின் தலைநகர் கராக். புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இங்கு வரலாற்று சிறப்பு மிக்க சிலுவைப்போர் கோட்டை உள்ளது. இதனால் அங்கு தினந்தோறும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் மாலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட திரளான பேர் அந்த கோட்டையை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு வாகனத்தில் வந்திறங்கிய 4 பயங்கரவாதிகள் அங்கிருந்த சுற்றுலா பயணிகளை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அந்த கோட்டைக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர். பின்னர் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளையும், அப்பாவி பொதுமக்களையும் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளினர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை நடத்தினர். விடிய, விடிய நீடித்த இந்த துப்பாக்கி சண்டை நேற்று அதிகாலையில் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகள் 4 பேரும் அதிரடி படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

முன்னதாக பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், கனடா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், போலீஸ் அதிகாரிகள் 7 பேர், உள்ளூர்வாசிகள் இருவர் என 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் உள்பட 34 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

Next Story