அமெரிக்காவில் மேலும் ஒரு இந்தியர், மேயர் ஆனார் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து பட்டம் பெற்றவர்

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்தியர், மேயர் ஆனார் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து பட்டம் பெற்றவர்
x
தினத்தந்தி 23 Dec 2016 8:45 PM GMT (Updated: 2016-12-24T01:42:02+05:30)

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் குப்பெர்டினோ நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சவிதா வைத்தியநாதன் என்ற பெண் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் குப்பெர்டினோ நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சவிதா வைத்தியநாதன் என்ற பெண் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றார்.

இந்த நிலையில், அதே கலிபோர்னியா மாகாணத்தில் சான்பிரான்சிஸ்கோ தெற்கு நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதீப் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றுள்ளார்.

இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் புர்து பல்கலைக்கழகத்தில் முதுநிலை என்ஜினீயரிங் பட்டமும், டாக்டர் பட்டமும் பெற்றவர்.

அமெரிக்காவிலும், பிற வெளிநாடுகளிலும் 30 ஆண்டுகள் மின்பொறியியல் துறையில் பணியாற்றியவர்.

சான்பிரான்சிஸ்கோ தெற்கு நகர மேயராக பதவி ஏற்றுள்ள பிரதீப் குப்தா, இதுபற்றி குறிப்பிடுகையில், “முன்னாள் மேயர் மார்க் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வது எனக்கு கிடைத்துள்ள கவுரவம் ஆகும். இந்த மாநகர கவுன்சிலை வழிநடத்துவதற்கு ஆர்வமாக உள்ளேன்” என கூறினார்.

மேயர் ஆவதற்கு முன்னர் பிரதீப் குப்தா, அந்த நகர திட்ட கமிஷனில் பணியாற்றி உள்ளார். அதன் தலைமைப் பொறுப்பிலும் இருந்துள்ளார்.

இந்த நகரத்தின் துணை மேயராக பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. இவரையும் சேர்த்து கலிபோர்னியா மாகாணத்தில் இப்போது 2 இந்தியர்கள் மேயர் பதவி வகிக்கிறார்கள். 

Next Story