சிரியாவில் துருக்கி விமானங்கள் குண்டுமழை அப்பாவி மக்கள் 88 பேர் கொன்று குவிப்பு


சிரியாவில் துருக்கி விமானங்கள் குண்டுமழை அப்பாவி மக்கள் 88 பேர் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-24T01:50:43+05:30)

சிரியாவில் துருக்கி விமானங்கள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய குண்டுவீச்சில் அப்பாவி மக்கள் 88 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

பெய்ரூட்,

சிரியாவில் துருக்கி விமானங்கள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய குண்டுவீச்சில் அப்பாவி மக்கள் 88 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஐ.எஸ். அமைப்பினர் ஆதிக்கம்

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே தொடர்ந்து 6-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இன்னொரு பக்கம் அங்கே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக அண்டை நாடான துருக்கியின் படைகள் வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

குண்டுமழை

இந்த நிலையில் அங்கு ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள அல் பாப் நகரில் நேற்று முன்தினம் துருக்கி விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஏதுமறியாத அப்பாவி குழந்தைகள் 21 பேர் உள்பட 72 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த குண்டு மழையை துருக்கி விமானங்கள் நேற்றும் தொடர்ந்தன. நேற்றைய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் குழந்தைகள்.

24 மணி நேரம் நடந்த தாக்குதல்களில் மொத்தம் 88 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இப்படி ஐ.எஸ். அமைப்பினரின் ஆதிக்க பகுதிகளில் நடத்தப்படுகிற தாக்குதல்களில், அப்பாவி மக்கள் தொடர்ந்து பலியாகி வருவது சர்வதேச சமூகத்துக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாக உள்ளது.

மனித உரிமை கண்காணிப்பகம்

இந்த தாக்குதல் பற்றி சிரியாவில் உள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தெல் ரகுமான் கூறியதாவது:-

கடந்த ஆகஸ்டு மாதம், சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக துருக்கி படைகள் களம் இறங்கியது முதல் நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

அதை வைத்துப்பார்க்கிறபோது, அங்கு துருக்கி நடத்திய தாக்குதல்களில் மிகக் கடுமையான தாக்குதல் இது என்று சொல்லலாம். 24 மணிநேரம் துருக்கி விமானங்கள் குண்டுமழை பொழிந்து தள்ளி விட்டன.

தாக்குதல் நடத்தியது எந்த நாட்டின் விமானம் என்பதை, அதன் வகை, இடம், பறக்கிற பாணி, பயன்படுத்தப்படுகிற வெடிகுண்டுகளின் அடிப் படையில் எங்களால் கணித்து சொல்ல முடியும்.

அந்த வகையில் 24 மணிநேரம் அல் பாப் நகரில் துருக்கி விமானங்கள் நடத்திய அதி பயங்கர தாக்குதல்களில் 88 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தாக்குதல் நடைபெற்றுள்ள அல் பாப் நகரத்தை ஐ.எஸ். அமைப்பினரிடம் இருந்து மீட்பதற்காக துருக்கி, தனது சிரிய கிளர்ச்சி கூட்டாளிகளுடன் சேர்ந்து கடுமையாக சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story