ரஷிய ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து 92 பேர் உயிரிழப்பு; விளாடிமிர் புதின் விசாரணைக்கு உத்தரவு

ரஷிய ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து 92 பேர் உயிரிழப்பு; விளாடிமிர் புதின் விசாரணைக்கு உத்தரவு
x
தினத்தந்தி 25 Dec 2016 10:07 AM GMT (Updated: 2016-12-25T15:37:43+05:30)

உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷிய படைகளும் களமிறங்கி, கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகின்றன. சிரியாவில் ஹமெய்மிம் ராணுவ தளத்தில் முகாமிட்டு, கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகிற ரஷிய படையினரின் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இசை நிகழ்ச்சி நடத்த ரஷியா முடிவு செய்தது. இதற்காக இசைக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட 92 பேருடன் ரஷியாவின் டி.யு-154 ராணுவ விமானம் சோச்சியில் இருந்து புறப்பட்டு சென்றது. சிரியாவின் லட்டாகியா நகரை நோக்கி சென்ற விமானத்தில் பயணிகள் 84 பேர், சிப்பந்திகள் 8 பேர் என மொத்தம் 92 பேர் பயணம் செய்தனர்.

மாஸ்கோ, 

கருங்கடலில் விழுந்து ராணுவம் விமானம் விபத்துக்குள் சிக்கியது தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். 

உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷிய படைகளும் களமிறங்கி, கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகின்றன. சிரியாவில் ஹமெய்மிம் ராணுவ தளத்தில் முகாமிட்டு, கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகிற ரஷிய படையினரின் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இசை நிகழ்ச்சி நடத்த ரஷியா முடிவு செய்தது. இதற்காக இசைக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட 92 பேருடன் ரஷியாவின் டி.யு-154 ராணுவ விமானம் சோச்சியில் இருந்து புறப்பட்டு சென்றது.  சிரியாவின் லட்டாகியா நகரை நோக்கி சென்ற விமானத்தில் பயணிகள் 84 பேர், சிப்பந்திகள் 8 பேர் என மொத்தம் 92 பேர் பயணம் செய்தனர்.

விமானம் சோச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற 20 நிமிடத்தில் ரேடார் திரையில் இருந்து மறைந்தது. அதைத் தொடர்ந்து அந்த விமானத்தை தேடும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அதில் அந்த விமானம், கருங்கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. அந்த விமானத்தின் சிதைவுகள், கருங்கடலில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் சோச்சி நகர கடலோர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒரு பயணியின் உடல், சோச்சி நகர கடலோரத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. 

இந்த விபத்தில் 92 பேரும் பலியாகி இருக்க வேண்டும், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
பலியானவர்களின் உடல்களை தேடி கைப்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த விமான விபத்துக்கு பயங்கரவாத தாக்குதலோ, மோசமான வானிலையோ காரணமாக இருக்காது என்றும், விமானத்தின் தொழில் நுட்பக்கோளாறு அல்லது விமானியின் தவறுதான் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் முறையான விசாரணையை ரஷிய விசாரணைக்குழு தொடங்கி உள்ளது. விபத்து பற்றிய விவரங்கள் உடனடியாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தெரிவிக்கப்பட்டது. விளாடிமிர் புதின் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டு உள்ளார். விமானம் விபத்துக்குள் சிக்கியது தொடர்பாக விசாரணை குழுவை நியமிக்க பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவிற்கு உத்தரவிட்டு உள்ளார். விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Next Story