சிலியில் பயங்கர நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பீதி

சிலியில் பயங்கர நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பீதி
x
தினத்தந்தி 26 Dec 2016 8:45 PM GMT (Updated: 2016-12-26T22:58:16+05:30)

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் உள்ள லாஸ் லாகோஸ் பிராந்திய பகுதி புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கிவருகிறது. இங்கு நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் குவிந்திருந்தனர்.

சாண்டியாகோ,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் உள்ள லாஸ் லாகோஸ் பிராந்திய பகுதி புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கிவருகிறது. இங்கு நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் குவிந்திருந்தனர்.

அப்போது அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் அங்கு உள்ள கடற்கரை நகரங்களை கடுமையாக உலுக்கியது.

வீடுகள், வணிகவளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. சாலைகள் மற்றும் பாலங்களில் விரிசல் ஏற்பட்டது. பீதியடைந்த மக்கள் அலறி அடித்தபடி வீதிகளில் ஓட்டம் பிடித்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 21 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின.

இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே கடலோர பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி சுமார் 5 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். சுனாமி எச்சரிக்கையால் சிறிய அளவிலான 8 துறைமுகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

3 மணிநேரத்திற்கு பின் சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது. இதனால் நிம்மதியடைந்த மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

இந்த நிலநடுக்கத்தால் அங்கு உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ, யாரும் காயம் அடைந்ததாகவோ இதுவரை தகவல்கள் இல்லை. மேலும் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை.Next Story