மொசூல் நகரில் சண்டை தீவிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 100 பேர் கொன்று குவிப்பு


மொசூல் நகரில் சண்டை தீவிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 100 பேர் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2016 9:15 PM GMT (Updated: 26 Dec 2016 5:32 PM GMT)

ஈராக்கின் மொசூல் நகரில் ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை தீவிரம் அடைந்து உள்ளது. ராணுவத்தின் தாக்குதல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டனர்.

பாக்தாத்,

ஈராக்கின் மொசூல் நகரில் ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை தீவிரம் அடைந்து உள்ளது. ராணுவத்தின் தாக்குதல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டனர்.

மொசூல் நகரில் போர் 

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள அந்நாட்டின் 2–வது மிகப்பெரிய நகரான மொசூல் நகரை அவர்களிடம் இருந்து மீட்பதற்கான போரை ஈராக் ராணுவம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.

இந்த முயற்சியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் அந்த நகரின் முக்கிய பகுதிகளை தங்கள் வசமாக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகளை அங்கிருந்து விரட்டி அடித்தது. இருப்பினும் அங்கு இன்னும் பல பகுதிகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் தான் உள்ளன. எனவே அந்த நகரை முற்றிலுமாக கைப்பற்றும் முயற்சியில் ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளது.

இதற்கிடையே அந்த நகரில் தங்களிடம் இருந்து ராணுவத்தினர் மீட்ட பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சதித்திட்டம் முறியடிப்பு 

நேற்று முன்தினம் மொசூல் நகரின் தென்கிழக்கு பகுதியில் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அல்–இன்டிசர், அல்–சாய்மா மற்றும் அல்–சலாம் ஆகிய பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள், ராணுவத்தினரை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்த முயன்றனர்.

வெடிகுண்டுகள் நிரப்பிய கார்கள் மூலம் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்த முயற்சி நடந்தது. இந்த 3 பகுதிகளிலும் அவர்களது சதித்திட்டம் ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 51 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். 4 தற்கொலைப்படை வாகனங்களும் அழிக்கப்பட்டன.

அதேபோல் மொசூல் நகரின் தென்பகுதியில் மத்திய போலீஸ் படையினரின் நிலைகள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இந்த முயற்சியும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இதில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 2 கார்கள் அழிக்கப்பட்டன.

100 பயங்கரவாதிகள் பலி 

இதற்கிடையே, அல்–வாதா என்ற இடத்தில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக அங்கு உள்ள ஒரு கட்டிடத்தில் ஏராளமான பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தனர். இதை அறிந்து அமெரிக்க கூட்டுப்படைகளின் போர் விமானங்கள் அந்த கட்டிடத்தின் மீது சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். படுகாயங்களுடன் ஏராளமான பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த 5 தாக்குதல்களிலும் மொத்தம் ஐ.எஸ். இயக்கத்தின் பயங்கரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story