மியான்மர் எல்லையில் இருந்து இந்தியாவின் மீது பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தான் திட்டம்


மியான்மர் எல்லையில் இருந்து இந்தியாவின் மீது பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தான் திட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2016 5:40 AM GMT (Updated: 28 Dec 2016 5:40 AM GMT)

மேற்கு எல்லையை விட்டுவிட்டு கிழக்கு எல்லையை குறிவைக்க பாகிஸ்தானின் உளவு அமைப்பு திட்டமிட்டு உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க மியான்மர் - தாய்லாந்து எல்லையில் பயங்கரவாத முகாம்களை அமைக்க பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்து பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறை இந்தியாவிற்கு பயங்கரவாதிகளை அனுப்பி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியா சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்கள் (இந்தியாவிற்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அனுப்பும் மையப்பகுதி) மீது துல்லிய தாக்குதலை நடத்தியது. இதில் 40-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், ஆனால் ஒன்றும் நடக்காதது போல் காட்டிக்கொள்ள பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்திய எல்லையை நோக்கி அயராது தாக்குதலை தொடுத்தது, இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியால் எப்போதும் போல் வாலை சுருட்டிக் கொண்டது.

இப்போது மேற்கு எல்லையை விட்டுவிட்டு கிழக்கு எல்லையை குறிவைக்க பாகிஸ்தானின் உளவு அமைப்பு திட்டமிட்டு உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகள் ஏவுதளத்தினை கிழக்கு எல்லையில் கொண்டுவர பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு உள்ளது. உளவுத்துறை தகவல்கள்படி, இந்தியாவிற்கு எதிரான திட்டத்தில் பாகிஸ்தான் மாற்றம் கொண்டு வந்து உள்ளது தெரியவந்து உள்ளது. 

* பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. சமீபத்தில் தாய்லாந்து - மியான்மர் எல்லையில் உள்ள மாரிசோட் பகுதியில் பயங்கரவாத முகாமை அமைத்து உள்ளது என்று இந்திய உளவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளன.  

* இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள மியான்மரில் உள்ள ரோஹிங்கிய இஸ்லாமியர்களுக்கு பயிற்சி கொடுக்க தலிபான் பயங்கரவாதிகளை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. பயன்படுத்துகிறது என்றும் தெரியவந்து உள்ளது. இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் ரத்தம் சிந்த வேண்டும் என்பதற்காக பாகிஸ்தானின் புதிய சூத்திரம் இதுவாகும். 

* மே சோட்டில் அமைக்கப்படும் பயங்கரவாத முகாமானது இந்தியா மற்றும் வங்காளதேசத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும்.   

* ஹர்காத்-உல்-ஜிகாத்-உல்-இஸ்லாமி அர்கானா மற்றும் சில காஷ்மீரி பயங்கரவாத இயக்கங்களுக்கும் பயிற்சி அளிக்க பாகிஸ்தான் தலிபான் உதவியை அந்நாட்டு உளவுத்துறை பெற்று உள்ளது என்றும் நம்பப்படுவதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன.

* சமீபத்தில் சிக்கிய பயங்கரவாதியிடம் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தபோது சில மாதங்களுக்கு முன்னர் மே சோட் விவகாரம் வெளியே தெரியவந்தது.

* பயங்கரவாத நடவடிக்கைக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பெருமளவு பணம் மற்றும் ஆயுதங்களை ஏற்பாடு செய்து உள்ளது என்று இந்திய உளவுத்துறை நம்புகிறது, இதற்கிடையே சமீபத்தில் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஹர்காத்-உல்-ஜிகாத்-உல்-இஸ்லாமி அர்கானா இயக்க தலைவன் மவுனாலா அப்துலுடன், லஷ்கர்-இ-தொய்பா ஹபீஸ் சயீத் சந்தித்து பேசியதாகவும் தெரியவந்து உள்ளது.

Next Story