பியர்ல் துறைமுக தாக்குதல் 75–வது ஆண்டு: இனி ஜப்பான் எப்போதும் போரில் ஈடுபடாது அமெரிக்காவில் ஜப்பான் பிரதமர் உறுதி


பியர்ல் துறைமுக தாக்குதல் 75–வது ஆண்டு: இனி ஜப்பான் எப்போதும் போரில் ஈடுபடாது அமெரிக்காவில் ஜப்பான் பிரதமர் உறுதி
x
தினத்தந்தி 29 Dec 2016 12:15 AM GMT (Updated: 2016-12-29T01:47:29+05:30)

இனி ஜப்பான் எப்போதும் போரில் ஈடுபடாது என்று அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே கூறினார். பியர்ல் துறைமுக தாக்குதல் 2–ம் உலகப் போரின்போது ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா, ரஷியா நாடுகளுக்கு எதிராக ஜப்பான் செயல்பட்டது. 1941–ம் ஆண்டு டிசம்ப

வாஷிங்டன்,

இனி ஜப்பான் எப்போதும் போரில் ஈடுபடாது என்று அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே கூறினார்.

பியர்ல் துறைமுக தாக்குதல்

2–ம் உலகப் போரின்போது ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா, ரஷியா நாடுகளுக்கு எதிராக ஜப்பான் செயல்பட்டது. 1941–ம் ஆண்டு டிசம்பர் 7–ந் தேதி அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள பியர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பானின் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் அமெரிக்காவின் 8 போர் கப்பல்களும், 188 விமானங்களும் சேதமடைந்தன. 2,500 பேர் கொல்லப்பட்டனர்.

இதுவே உச்சகட்ட போரின்போது (1945–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்) ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசுவதற்கு காரணமாக அமைந்தது. இதில் 1.30 லட்சத்துக்கும் அதிகமான ஜப்பானியர்கள் கொல்லப்பட்டனர்.

75–வது ஆண்டு

பியர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பான் நடத்திய 75–வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி பியர்ல் துறைமுகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

அங்கு கட்டப்பட்டுள்ள நினைவகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். ஜப்பான் பிரதமர் ஒருவர் இந்த நினைவிடத்துக்கு செல்வது இதுவே முதல் முறை ஆகும்.

நிகழ்ச்சியில் ஷின்ஜோ அபே பேசும்போது கூறியதாவது:–

போரில் ஈடுபடமாட்டோம்

ஜப்பான் நடத்திய தாக்குதலில் இங்கே பலியானவர்களுக்காக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக இங்கே வீர தீரத்துடன் போராடிய வீரர், வீராங்கனைகளுக்காக இந்த நினைவகம் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களின் ஆன்மாவின் அமைதிக்காக பிரார்த்திக்கிறேன்.

இந்த நினைவகத்துக்கு வந்த பிறகு இங்கு நிலவும் மனப்பூர்வ உண்மையால் என்னால் எதையும் பேச முடியவில்லை. பேச்சற்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன்.

அமெரிக்காவிற்கும், அமெரிக்க மக்களின் பொறுமைக்காகவும் மிகுந்த நன்றி. போரின் கொடுமைகள் மீண்டும் நிகழக் கூடாது. ஜப்பான் இனி ஒருபோதும் போரில் ஈடுபடாது. இது ஜப்பானிய மக்கள் அனைவரும் எடுத்துக்கொண்ட உறுதிமொழி ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு

ஜனாதிபதி ஒபாமா பேசும்போது, ‘‘பியர்ல் துறைமுகத்துக்கு ஜப்பானிய பிரதமர் வருகை தந்தது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. போரில் ஏற்பட்ட ஆழமான காயங்கள் கூட நட்புக்கும் நீடித்த சமாதானத்துக்கும் வழிவகுக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சான்றாகும்’’ என்று குறிப்பிட்டார்.

2–ம் உலகப்போர் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வெகுகாலம் கசப்புணர்வு நீடித்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முதல் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நகருக்கு பயணம் மேற்கொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

தற்போது புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் விரைவில் பதவி ஏற்க இருக்கும் நிலையில் ஷின்ஜோ அபேயின் அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Next Story