பாக்தாத் சந்தையில் தற்கொலைப்படை தாக்குதல் 13 பேர் உடல்சிதறி உயிரிழப்பு


பாக்தாத் சந்தையில் தற்கொலைப்படை தாக்குதல் 13 பேர் உடல்சிதறி உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 Jan 2017 8:15 PM GMT (Updated: 8 Jan 2017 4:22 PM GMT)

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அங்குள்ள முக்கிய காய்கறி சந்தையான ஜமிலா சந்தை, நேற்று காலை வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டிருந்தனர். அந்

பாக்தாத்,

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

அங்குள்ள முக்கிய காய்கறி சந்தையான ஜமிலா சந்தை, நேற்று காலை வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஒரு கார், சந்தையின் நுழைவாயிலில் நுழைந்தது. அது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காராக இருக்கலாம் என சந்தேகித்த பாதுகாப்பு படை வீரர், அந்த காரை ஓட்டி வந்தவர் மீது துப்பாக்கியால் சுட்டார். அதே நேரத்தில் அந்த காரை ஓட்டி வந்தவர், காரில் இருந்த குண்டுகளை வெடிக்க செய்தார். பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின. கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 50 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கத்தினர் பொறுப்பு ஏற்றனர்.

ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கிற இந்த பகுதிகளில், சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். இயக்கத்தினர் இத்தகைய தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story