தலீபான்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்கள் அமெரிக்கா அனுப்புகிறது


தலீபான்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்கள் அமெரிக்கா அனுப்புகிறது
x
தினத்தந்தி 8 Jan 2017 7:45 PM GMT (Updated: 8 Jan 2017 7:04 PM GMT)

தலீபான்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தலீபான்கள் ஆதிக்கம் அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின்மீது 2001–ம் ஆண்டு, செப்டம்பர் 11

வாஷிங்டன்,

தலீபான்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

தலீபான்கள் ஆதிக்கம்

அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின்மீது 2001–ம் ஆண்டு, செப்டம்பர் 11–ந்தேதி, பின்லேடனின் அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தனர்.

இந்த அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து அங்கிருந்த தலீபான்களை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் அங்கு தங்கி இருந்து, தலீபான்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதில் உள்நாட்டு படைகளுக்கு பக்கபலமாக இருந்து வந்தன.

படைகள் வாபஸ்

ஓரளவு இயல்பு நிலை திரும்பிய நிலையில், அங்குள்ள அமெரிக்க படைகளை கொஞ்சம், கொஞ்சமாக விலக்கிக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கியது. தற்போது ஆப்கானிஸ்தானில் 8 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், காபூல், பாக்ராம் ஆகிய இடங்களில் உள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் ஐ.எஸ். இயக்கத்தினரை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான ஹெல்மாண்ட் மாகாணத்தில் இருந்து அமெரிக்க படைகள் 2014–ம் ஆண்டு வாபஸ் பெறப்பட்டன.

மீண்டும் காலூன்றுகின்றனர்

அதைத் தொடர்ந்து அங்கு தலீபான்கள் மீண்டும் காலூன்றத்தொடங்கினர். சமீப காலமாக அந்த மாகாணத்தில் தலீபான்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். முக்கிய பகுதிகளை வளைத்துக்கொண்ட அவர்கள், மாகாண தலைநகர் லஷ்கர்காரை நெருங்கி முன்னேறி வருகின்றனர். அவர்களின் முன்னேற்றத்தையும், கொட்டத்தையும் அடக்க முடியாமல் உள்நாட்டு படைகள் திணறி வருகின்றன.

இந்த நிலையில் ஹெல்மாண்ட் மாகாணத்தில், நேட்டோ படைகள் தங்கள் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ராணுவம் கேட்டுக்கொண்டது.

300 கடற்படை வீரர்கள்

இதற்கிணங்க அமெரிக்கா, ஹெல்மாண்ட் மாகாணத்துக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்புவது என முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க கடற்படையின் மத்திய கட்டளை பிரிவு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வில்லியம் பேட்லர் கூறுகையில், ‘‘ஆப்கானிஸ்தான் இன்னும் பயங்கரவாதத்தின் பிடியில்தான் உள்ளது. எங்களது நோக்கம், ஆப்கானிஸ்தான் படைகளுக்கு பயிற்சியும், ஆலோசனையும் வழங்குவதுதான். ஆப்கானிஸ்தான் அதைக்கொண்டு தங்கள் பலத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். எங்களது பணியில் பல ஆபத்துகள் உள்ளன’’ என குறிப்பிட்டார்.


Next Story