பயணங்களின்போது உயிருக்கு ஆபத்து இருந்தாலும், பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் போப் ஆண்டவர் திட்டவட்டம்


பயணங்களின்போது உயிருக்கு ஆபத்து இருந்தாலும், பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் போப் ஆண்டவர் திட்டவட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2017 9:45 PM GMT (Updated: 8 Jan 2017 7:25 PM GMT)

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 80), பயணங்களின்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் என சூசகமாக உணர்த்தி உள்ளார். இத்தாலியை சேர்ந்த எழுத்தாளர் ஆன்ட்ரியா டோர்னியெல்லி எழுதிய ‘பயணம்’ எ

வாடிகன்,

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 80), பயணங்களின்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் என சூசகமாக உணர்த்தி உள்ளார்.

இத்தாலியை சேர்ந்த எழுத்தாளர் ஆன்ட்ரியா டோர்னியெல்லி எழுதிய ‘பயணம்’ என்ற புத்தகத்துக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ், அணிந்துரை எழுதி உள்ளார்.

அதில் அவர், ‘‘எனக்கு பயணங்களின்போது ஆபத்துகள் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். ஒரு வேளை நான் அதில் பொறுப்பற்று இருக்கலாம். ஆனால் எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் என்னுடன் பயணம் செய்கிறவர்களுக்காக, பல்வேறு நாடுகளில் என்னை சந்திக்க வருகிற மக்களுக்காக நான் கவலைப்படுகிறேன். ஆனாலும் கடவுள் எப்போதும் இருக்கிறார்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘‘ நான் எப்போதும் குண்டு துளைக்காத கார்களை எங்கு சென்றாலும் பயன்படுத்த முடியாது. போப்புக்குரிய குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்திய கார்களையும் பயன்படுத்த இயலாது. பாதுகாப்பு தேவை குறித்து நான் முழுமையாக உணர்ந்து கொண்டுள்ளேன். ஆனாலும், போப் என்பவர் ஒரு ஆயர். அவர் ஒரு தந்தை. அவருக்கும் மக்களுக்கும் இடையே அளவு கடந்த (பாதுகாப்பு) தடைகள் இருக்க முடியாது. இதனால்தான் நான் ஆரம்பம் முதல், மக்களை சந்திக்க முடியும் என்றால்தான் நான் பயணம் செய்வேன் என கூறி வந்துள்ளேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ், முந்தைய போப் ஆண்டவர்களைப் போன்று குண்டு துளைக்காத ‘புல்லட் புரூப்’ வாகனங்களை பயன்படுத்துவதில்லை. வெளிநாட்டு பயணங்களின்போதும் சாதாரண கார்களையே பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story