மெக்சிகோவில் அமெரிக்க துணை தூதரக அதிகாரியை சுட்டுக்கொல்ல முயன்ற இந்தியர் கைது விசா மறுக்கப்பட்டதால் கோபம்


மெக்சிகோவில் அமெரிக்க துணை தூதரக அதிகாரியை சுட்டுக்கொல்ல முயன்ற இந்தியர் கைது விசா மறுக்கப்பட்டதால் கோபம்
x
தினத்தந்தி 10 Jan 2017 11:15 PM GMT (Updated: 10 Jan 2017 7:32 PM GMT)

மெக்சிகோவில் அமெரிக்க துணை தூதரக அதிகாரியாக பணியாற்றி வந்த கிறிஸ்டோபர், கடந்த 7–ந் தேதி குவாதஜாரா நகரில் உள்ள வணிகவளாகத்தின் கார்கள் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி

வாஷிங்டன்,

மெக்சிகோவில் அமெரிக்க துணை தூதரக அதிகாரியாக பணியாற்றி வந்த கிறிஸ்டோபர், கடந்த 7–ந் தேதி குவாதஜாரா நகரில் உள்ள வணிகவளாகத்தின் கார்கள் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கிறிஸ்டோபர் பின்னர் அபாய கட்டத்தை தாண்டினார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபரை தீவிரமாக தேடி வந்த மெக்சிகோ போலீசாருக்கு தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவின் வீடியோ பதிவு கிடைத்து. அதில் தாக்குதல் நடத்தியவரின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 8–ந் தேதி அதிகாலையில் அந்த மர்மநபரை போலீசார் கைது செய்தனர்.

முதலில், அவர் அமெரிக்க குடிமகன் என்றும், எனவே அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தி விட்டதாகவும் மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் நபர் இந்தியர் என தற்போது தெரியவந்து உள்ளது. அவரது பெயர் ஜாபர் ஜியா (வயது 31) என்றும், அவர் இந்தியாவில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறியவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.

மேலும், ஜாபர் ஜியா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மெக்சிகோவின் குவாதஜாரா நகரில் வசித்து வந்ததும், அங்கு அவருக்கு அமெரிக்க தூதரகத்தால் விசா மறுக்கப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. விசா மறுக்கப்பட்டதால் கோபத்தில் இருந்து வந்த ஜாபர் ஜியா துணை தூதரக அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story