ரோஹிங்யா அகதிகளை திரும்ப பெறுங்கள் மியான்மருக்கு வங்கதேசம் கோரிக்கை


ரோஹிங்யா அகதிகளை திரும்ப பெறுங்கள் மியான்மருக்கு வங்கதேசம் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2017 10:10 AM GMT (Updated: 12 Jan 2017 10:10 AM GMT)

ரோஹிங்கா அகதிகளை திரும்ப பெறுங்கள் என மியான்மருக்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்து உள்ளது.

டாக்கா, 

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் 

மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது. 

பல்வேறு தாக்குதலை எதிர்க்கொண்டு தலைமுறைகள் கணக்கில் வசித்துவரும் இவர்களுக்கு அரசு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது. 

ராஹினேவில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற மத கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர். இப்போதும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மோசமான முகாம்களிலே வசித்து வருகின்றனர். அவர்கள் பெரும் பாகுபாடுடன் நடத்தப்படுகின்றனர். சிலர் அங்கிருந்து எப்படியாவது அகதியாக வேறுநாட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். 

ராஹினேவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுப்பதாக கூறிவரும் மியான்மர், சிறுபான்மையினர்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் தாக்கப்படும் சம்பவத்தை மறுக்கிறது.

மாறாத காட்சி

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது ராணுவத்தினர் நடத்திவரும் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

படுகொலை, சித்ரவதை, பாலியல் பலாத்காரம் என்று கடுமையான தாக்குதல்கள் மூலம் ரோஹிங்யா இஸ்லாமியர்களை அச்சுறுத்தி, அவர்களது வாழ்விடத்திலிருந்து விரட்டும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் வங்கதேசத்துக்குத் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மியன்மரின் பவுத்தர்களின் தாக்குதல்களிலிருந்தும் அரச அடக்குமுறையிலிருந்தும் தப்பி, மலேசியா, இந்தோனேசியா செல்ல ரோஹிங்யா இஸ்லாமியர்கள்  புலம் பெயர்ந்து ஆள் கடத்தல் கும்பலிடம் பணம் கொடுத்து மாட்டிக் கொள்ளும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.

இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆங் சான் சூச்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து பிற நாடுகளில் வாழும் ரோஹிங்யா இஸ்லாமிய அகதிகளால் போராட்டம் நடத்தப்படும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.  

மியான்மரில் மக்களாட்சி மலர போராடிய ஆங் சான் சூச்சியால் தங்களுக்கு விடிவு பிறக்கும் என்ற அவர்களுக்கு ராணுவத்தினால் இடி இறக்கப்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்த வண்ணமே உள்ளது.

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது பாதுகாப்பு படையினரால் பிரயோகிக்கப்படும் வன்முறையை பவுத்த அதிகாரிகள் சிறிய பிரச்சனை என்று ஒதுக்கிவிடுவார்கள் என்பதில் எந்தஒரு ஐயமும் கிடையாது என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 

இதுபோன்ற வன்முறை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விசாரணை அதிகாரிகளோ, செய்தியாளர்களோ செல்ல முடியாத நிலையில் வெளியாகும் செய்திகளையும் அந்நாட்டு அரசு பொய்யான செய்தி என புறந்தள்ளினாலும் ஐயம் கிடையாது. போர் எண்ணமானது அங்கு உயர்நிலைப் பெற்று உள்ளது. அங்கு சிறுபான்மையினர் மீது பிரயோகிக்கப்படும் அயோக்கியத்தனம் போர் குற்றமாக பார்க்கப்படுவது கிடையாது.

அதிர்ச்சி வீடியோ

மியான்மரில் ரோஹிங்யா சிறுபான்மையினர் கொடுமையான முறையில் போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்படும் சம்பவம் அடங்கிய வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


ரோஹிங்யா இஸ்லாமியர்களை மியான்மர் பாதுகாப்பு படை வீரர்கள் கொடூரமாக தாக்கும் காட்சி. 

ராஹினேவில் கடந்த நவம்பர் மாதம் இந்த கொடூரத் தாக்குதலானது சிறுபான்மையினர் மீது போலீசால் பிரயோகிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக மியான்மர் அதிகாரிகள் கூறிஉள்ளனர். இப்போது வெளியாகியிருக்கும் வீடியோவானது மியான்மருக்கு உலக அரங்கில் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மியான்மர் அதிகாரிகளும் பிரச்சனையை கையாளவது எப்படி என ஆலோசிக்க தொடங்கிஉள்ளனர். 

வங்கதேசம் கோரிக்கை

இப்போது இதில் புதுநிகழ்வாக மியான்மரில் இருந்து அகதிகளாக வந்த ரோஹிங்யா இஸ்லாமியர்களை திரும்ப அழைக்கவேண்டும் என்று வங்காளதேசம் கோரிக்கை விடுத்து உள்ளது. ரோஹிங்யா இஸ்லாமியர்கள் 3 லட்சம் பேர் வங்காளதேசத்தில் இப்போது அகதிகளாக உள்ளனர்.

வங்காள தேசம் பிரதமர் ஷேக் ஹசீனா, ரோஹிங்யா அகதிகளை திரும்ப பெறுங்கள் என மியான்மர் அரசிடம் கேட்டுக் கொண்டு உள்ளார் என அந்நாட்டு அரசு அறிக்கை விடுத்து உள்ளது. ஐ.நா. சபை தகவலின்படி சமீபத்தில் மட்டும் மியான்மரில் இருந்து வங்காளதேசத்திற்கு சுமார் 60 ஆயிரம்பேர் அகதிகளாக தஞ்சம் புகுந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபரில் மியான்மரில் போலீஸ் நிலையங்கள் மீதான தாக்குதலை அடுத்து ராணுவம் சிறுபான்மையினர் மீதான பலத்தை பிரயோகிப்பதை அதிகரித்து உள்ளது,

 இதனால் மக்கள் தஞ்சம் கோரி வங்காளதேசத்திற்கு வந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


 மியான்மரில் இருந்து வங்காள தேசத்திற்குள் நுழைய முயற்சித்த ரோஹிங்கா இஸ்லாமியர்களை வங்கதேச போலீசார் பிடித்த போது எடுத்தப்படம் (டிசம்பர் 25, 2016). 

டாக்காவில் மியான்மர் நாட்டின் வெளியுறவுத்துறை துணை மந்திரி க்யாவ் டின்னுடன் பேசிய ஷேக் ஹசீனா, இக்கோரிக்கையை வைத்து உள்ளார். கடந்த மாதம் வங்காள தேச வெளியுறவுத்துறை மந்திரி மியான்மர் தூதருக்கு சம்மன் விடுத்து, அகதிகள் விவகாரம் தொடர்பாக கடும் கவலையை வெளிப்படுத்தினார். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வங்காளதேசத்தில் பல ஆண்டுகளாக அகதிகளாக வசிக்கும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கவும் மியான்மாருக்கு அழைப்பு விடுத்தார்.


Next Story