பிரேசில் சிறையில் பயங்கர மோதல்; 10 கைதிகள் உயிரிழப்பு


பிரேசில் சிறையில் பயங்கர மோதல்; 10 கைதிகள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 15 Jan 2017 10:00 AM GMT (Updated: 2017-01-15T15:30:02+05:30)

பிரேசில் நாட்டின் சிறை ஒன்றில் போட்டி கும்பல்கள் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 10 கைதிகள் கொல்லப்பட்டனர்.

பிரேசிலியா, 

பிரேசிலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கிரிமினல் கைதிகள் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவதும், இதன் காரணமாக உயிர்ப்பலிகள் நேர்வதும் தொடர்கதை ஆகி வருகிறது. சிறைகளில் அளவு கடந்து கைதிகளை அடைத்து வைத்துள்ளதால் வன்முறை வெடிப்பது வாடிக்கையாகி விட்டது. புதிய சிறைகளை கட்டவும், தேசிய பாதுகாப்பு திட்டம் ஒன்றை தீட்டி செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரேசில் அதிபர் மிச்சல் டெமரும், நீதித்துறை மந்திரி அலெக்சாண்ட்ரி டி மொரேசும் சமீபத்தில் அறிவித்தனர்.

இந்த நிலையில், நடால் நகரில் உள்ள அல்காகஸ் சிறையில் நேற்று மதியம், கைதிகளில் 2 கும்பல்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். ஒரே கூச்சலும் குழப்பமும் நிலவியது. சிறை வளாகமே போர்க்களம் போல காணப்பட்டது. சிறைக்குள் குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச்சூடு சத்தங்களும் கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த மோதலில் 10 கைதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் சிலர் தலை துண்டித்து கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

நேற்று மதியம் ஆரம்பித்த இந்த மோதலில், சிறைக்குள் போலீஸ் படை செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்ததாகவும்,  காலைதான் போலீசாரால் உள்ளே புக முடிந்ததாகவும் தகவல்கள் சொல்கின்றன. மோதலுக்கு காரணம், சிறைக்குள் போதைப்பொருட்கள் வணிகத்தை யார் நடத்துவது என்பதில் இரண்டு கும்பல்கள் இடையே ஏற்பட்ட போட்டிதான் என்று சொல்லப்படுகிறது.

உலக அளவில் அதிகளவு சிறைக்கைதிகளை கொண்ட நாடுகளில், பிரேசில் நாட்டுக்கு 4-வது இடம். இங்கு 6 லட்சத்து 22 ஆயிரம் பேர் சிறைகளில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

Next Story