உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 19 Jan 2017 8:30 PM GMT (Updated: 19 Jan 2017 6:53 PM GMT)

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியின் வடபகுதியில் அமைந்திருக்கும் கோவா நகரில் உள்ள ராணுவ முகாமுக்குள் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை புகுத்தி, வெடிக்க செய்தனர்.

* மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியின் வடபகுதியில் அமைந்திருக்கும் கோவா நகரில் உள்ள ராணுவ முகாமுக்குள் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை புகுத்தி, வெடிக்க செய்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 60 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

* மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமாலா நாட்டின் அதிபரான ஜிம்மி மொராலஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. இது தொடர்பாக அதிபரின் மூத்த சகோதரர் சாமுவேல் சம்மி மொராலஸ் மற்றும் அதிபரின் மகன் ஜோஸ் மானுவல் மொராலஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

* ஜெர்மனியில் மக்கள் மீது லாரியை ஏற்றி கொலை செய்த நபர் துனிசியா நாட்டு அகதி என தெரியவந்ததை தொடர்ந்து, ஜெர்மனியில் உள்ள பிற நாட்டு அகதிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த வகையில் சந்தேகத்திற்கிடமான 550 அகதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களது நடவடிக்கைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கும் விழாவில் தைவான் பிரதிநிதிகள் கலந்துகொள்ள அனுமதிக்கக்கூடாது எனவும், இருநாடுகளுக்கு இடையே அலுவலக ரீதியாக எந்த வித உறவும் இருக்கக் கூடாது எனவும் சீனா அமெரிக்காவை வலியுறுத்தி உள்ளது.

* மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ நகரில் உள்ள தனியார் பள்ளியில், 15 வயது மாணவன் ஒருவன் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, ஆசிரியை மற்றும் ஒரு மாணவி, 2 மாணவர்கள் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு விட்டு, பின்னர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டான். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆசிரியை, மாணவி மற்றும் 2 மாணவர்கள் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story