டிரம்ப் எதிர்ப்பு பேரணிகளால் அமெரிக்கா குலுங்கியது; உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் அணி திரண்டனர்


டிரம்ப் எதிர்ப்பு பேரணிகளால் அமெரிக்கா குலுங்கியது; உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் அணி திரண்டனர்
x
தினத்தந்தி 22 Jan 2017 9:36 PM GMT (Updated: 2017-01-23T03:06:13+05:30)

டிரம்ப் எதிர்ப்பு பேரணிகளால் அமெரிக்கா குலுங்கியது. உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் அணி திரண்டு பேரணிகளை நடத்தினர்.

வாஷிங்டன்,

டிரம்ப் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க நாட்டின் 45–வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் (வயது 70) கடந்த 20–ந் தேதி பதவி ஏற்றார். தேர்தலுக்கு முன்பாகவே அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன.

குறிப்பாக பெண்கள், குடியுரிமை, முஸ்லிம்கள் தொடர்பான அவரது பார்வையும், கருத்துகளும் கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்தன.

குறிப்பாக பெண்களை பாலியல் ரீதியில் மோசமாக பார்க்கிற நடத்தை கொண்டவர் என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 10–க்கும் மேற்பட்ட பெண்கள் அவருக்கு எதிராக பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

வாஷிங்டனில் பேரணி

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, அவர் பதவி ஏற்ற பின்னரும் அவருக்கு எதிராக பல தரப்பினரும் கிளர்ந்தெழுந்து வருகின்றனர். நேற்று முன்தினம் அவருக்கு எதிராக அமெரிக்கா மட்டுமல்லாது 60 உலக நாடுகளில் பேரணிகள் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாஷிங்டன் நகரில் பென்சில்வேனியா அவினியூ, போராட்டக்காரர்களால் குலுங்கியது. அங்கு நடந்த மகளிர் பேரணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 எம்.பி.க்கள் உள்பட 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

சொந்த ஊரில் எதிர்ப்பு

இதில் பங்கேற்ற பிரபலங்களான ஹாலிவுட் பட இயக்குனர் மிக்கேல் மூரே, பெண் உரிமை ஆர்வலர் குளோரியா ஸ்டீனம், இசை கலைஞர் அலிசியா கீஸ் மற்றும் பலர் டிரம்புக்கு எதிராக ஆவேசமாக பேசினர். பாப் பாடகி மடோனா, வாஷிங்டன் நே‌ஷனல் மால் அருகே போராட்ட மேடையில் தோன்றினார்.

டிரம்பின் சொந்த ஊரான நியூயார்க் நகரிலும் அவருக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடந்தது. அங்கு போராட்டக்காரர்கள் டிரம்புக்கு சொந்தமான டிரம்ப் டவர் நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால் அவர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு விட்டனர். இந்த போராட்டத்தில் நடிகைகள் ஹெலன் மிர்ரன், சிந்தியா நிக்சன், ஊப்பி கோல்டு பெர்க் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிகாகோ நகரில் நடந்த போராட்டத்தில் 1½ லட்சம்பேர் பங்கேற்றனர். பாஸ்டன் நகரில் நடந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த பேரணியில் 7½ லட்சம் பேர் பங்கேற்று, டிரம்புக்கு எதிராக முழங்கினர். அங்கு 1½ லட்சம்பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7½ லட்சம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

உலகமெங்கும் பேரணி

அமெரிக்காவில் நடந்த டிரம்ப் எதிர்ப்பு பேரணிகளில் பங்கேற்றவர்களுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் நன்றி தெரிவித்துக்கொண்டார். தனது பிரசார வாசகங்களான ‘‘அனைவரும் ஒன்றிணைந்து வலிமை சேர்ப்போம்’’ என்பதை அவர் புதுப்பித்துக்கொண்டார்.

லண்டன், பாரீஸ், பெர்லின், ரோம் மற்றும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நகரங்களிலும், தென் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் நடந்த போராட்டங்களில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகமெங்கும் மொத்தம் 60 நாடுகளில் 600–க்கும் மேற்பட்ட இடங்களில் டிரம்ப் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story