அமெரிக்காவை பலத்த சூறாவளி தாக்கியது; 19 பேர் பலி 50–க்கும் மேற்பட்டோர் படுகாயம்


அமெரிக்காவை பலத்த சூறாவளி தாக்கியது; 19 பேர் பலி 50–க்கும் மேற்பட்டோர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Jan 2017 9:27 PM GMT (Updated: 23 Jan 2017 9:27 PM GMT)

அமெரிக்காவின் ஜார்ஜியா, மிசிசிபி மாகாணங்களை கடுமையான சூறாவளி தாக்கியது.

வாஷிங்டன்,

இதில் 19 பேர் பலியாயினர். 50–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பலத்த சூறாவளி

அமெரிக்காவின் புளோரிடா, மிசிசிபி, ஜார்ஜியா ஆகிய மாகாணங்களில் கடந்த சனிக்கிழமையில் இருந்து மோசமான வானிலை காணப்படுகிறது. அங்கு பலத்த மழையுடன் கடும் சூறாவளி காற்று வீசி வருகிறது.

நேற்று முன்தினம் காலை மணிக்கு 218 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. குறிப்பாக மிசிசிபி, ஜார்ஜியா மாநிலங்கள் இந்த சூறாவளியின் பிடியில் சிக்கிக் கொண்டன.

19 பேர் பலி

ஜார்ஜியா மாகாணத்தில் மட்டும் 7 கவுண்டிகள் சூறாவளியால் பெரும் பாதிப்பை சந்தித்தன. அங்குள்ள குக், புரூக்ஸ், டோகர்தி, பெர்ரியன் கவுண்டிகளில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த 100–க்கும் மேலான நடமாடும் வீடுகள் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. இவற்றில் 40 வீடுகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது.

அந்த வீடுகளில் இருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 30–க்கும் மேலானவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவசர நிலை பேரிடர் குழுவினர் குக் கவுண்டிக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதேபோல் தென் மத்திய ஜார்ஜியா மாகாணத்திலும் பலத்த சூறாவளி காற்று வீசியது. அங்கும் ஏராளமான நடமாடும் வீடுகள் தூக்கி வீசப்பட்டன. இதில் 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 20–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

டிரம்ப் இரங்கல்

இந்த 2 மாகாணங்களிலும் மொத்தம் 480 வீடுகள் சேதம் அடைந்ததாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜார்ஜியா, மிசிசிபி மாகாண கவர்னர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சூறாவளிக்கு பலியானவர்களுக்காக இரங்கல் தெரிவிப்பதாக அவர் கூறினார். 2 மாகாணங்களிலும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த சூறாவளி இன்னும் தீவிரம் அடைந்து புளோரிடா மாகாணத்தின் தென் பகுதியை கடுமையாக தாக்கலாம் என்று அமெரிக்க வானிலை இலாகா அறிவித்து உள்ளது.

இதனால் இப்பகுதியில் வசிப்போர் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் வெளியே நடமாடவேண்டிய அவசியம் உள்ளவர்கள் பாதுகாப்புக்காக போர்வையோ அல்லது பாயோ உடலில் சுற்றி கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.


Next Story