தடுப்புச்சுவர் திட்டத்திற்கு எதிர்ப்பு; மெக்சிகோ பொருட்களுக்கு 20 சதவீதம் இறக்குமதி வரி - டிரம்ப் அதிரடி


தடுப்புச்சுவர் திட்டத்திற்கு எதிர்ப்பு; மெக்சிகோ பொருட்களுக்கு 20 சதவீதம் இறக்குமதி வரி - டிரம்ப் அதிரடி
x
தினத்தந்தி 27 Jan 2017 5:29 AM GMT (Updated: 2017-01-27T10:59:52+05:30)

டொனால்டு டிரம்பின் எல்லை தடுப்புச்சுவர் திட்டத்தினால் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையிலான மோதல் தொடங்கி உள்ளது.

வாஷிங்டன், 

மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் என்பது சாதாரண நிகழ்வாக உள்ளது.
 
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, தான் வெற்றி பெற்றால் மெக்சிகோவுடனான எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் 3,200 கிலோ மீட்டர் தொலைவில் தடுப்புச் சுவர் கட்டப்படும் என்பது டொனால்டு டிரம்பின் தேர்தல் வாக்குறுதியின் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இப்போது அவர் வெற்றி பெற்று, ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர், அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இப்போது அதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ள டொனால்டு டிரம்ப் “எல்லையில்லாத தேசம் தேசமே கிடையாது,” என கூறிஉள்ளார். 

இப்போதையில் இருந்து அமெரிக்கா தன்னுடைய எல்லையையும் பெறும் என்றார் டிரம்ப். டொனால்டு டிரம்பின் உத்தரவை அடுத்து மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது. மெக்சிகோ எல்லையில் அமெரிக்கா குறிப்பிட்ட தொலைவு வேலிகளை அமைத்து உள்ளது. இப்போது முழுவதும் தடுப்புச் சுவர் அமைக்கவேண்டும் என்ற கொள்கையில் டிரம்ப் உறுதியாக உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு மட்டும் மெக்சிகோவில் இருந்து 5.8 மில்லியன் பேர் அங்கீகரிக்கப்படாமல் அமெரிக்காவிற்குள் குடிபெயர்ந்து உள்ளனர் என கூறப்படுகிறது. 

மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு உத்தரவிட்டது மட்டுமின்றி டொனால்டு டிரம்ப், மெக்சிகோ அதற்கான செலவையும் ஈடுசெய்ய வேண்டும் என்று கூறினார். 

மெக்சிகோ திட்டவட்டம்

அமெரிக்காவின் தடுப்புச்சுவர் நடவடிக்கைக்கு மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ கடும் கண்டனம் தெரிவித்தார். 

இதுபற்றி அவர் நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றினார். அப்போது அவர், சுவர்களில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை. நான் இதை பல முறை கூறி விட்டேன். இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது என குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், எல்லையில் சுவர் கட்டும் அமெரிக்காவின் நடவடிக்கை என்னை வருத்தத்துக்கு ஆளாக்கி உள்ளது. இது நம்மை சேர்ப்பதற்கு பதிலாக பிரித்து விடும் எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையே டிரம்பை சந்திப்பதற்காக நாளை (செவ்வாய்க்கிழமை) வாஷிங்டனுக்கு என்ரிக் பெனா நீட்டோ மேற்கொள்ள உத்தேசித்துள்ள பயணத்தை ரத்து செய்ய அவருக்கு அழுத்தம் தரப்பட்டது. இருப்பினும் இதில் அமெரிக்க தலைநகரத்தில் உள்ள மெக்சிகோ பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையைப் பெற்றும், கவர்னர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனையைக் கலந்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என என்ரிக் பெனா நீட்டோ கூறினார்.

இதனையடுத்து அமெரிக்கா பயணத்தை பெனா நீட்டோ ரத்து செய்துவிட்டார். 

“எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் அமெரிக்காவின் முடிவில் நான் வருத்தம் அடைந்து உள்ளேன், நிராகரிக்கின்றேன்,” என்று என்ரிக் பெனா நீட்டோ கூறிஉள்ளார். 

20 சதவீதம் வரி
 
மெக்சிகோ எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தன்னுடைய திட்டத்தில் உறுதியாக இருக்கும் டொனால்டு டிரம்ப் எல்லையில் சுவர் கட்டுவதற்கு மெக்சிகோ பொருட்களுக்கு 20 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட 50 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ-.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி) செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே அந்த தொகையை வழங்க மெக்சிகோ மறுத்த நிலையில் அதனிடம் இருந்தே வேறு விதமாக வசூலிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதன்படி மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 20 சதவீதம் இறக்குமதி வரிவிதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் எல்லை சுவர் கட்ட ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர் பணத்தை மிக எளிதாக வழங்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வெள்ளை மாளிகை பத்திரிகை துறை மந்திரி சீன் ஸ்பைசர் தெரிவித்துள்ளார். 

பிலாடெல் பியாவில் இருந்து வாஷிங்டனுக்கு அதிபர் டிரம்புடன் பயணம் செய்தபோது இத்தகவலை அவர் வெளியிட்டார். மேலும் அவர் கூறும்போது, 160 நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இதுபோன்று இறக்குமதி வரி விதிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், முதலில் மெக்சிகோ பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மெக்சிகோ கண்டனம்

மெக்சிகோ பொருட்களுக்கு 20 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு மெக்சிகோ கண்டனம் தெரிவித்து உள்ளது. மெக்சிகோவின் வெளியுறவுத்துறை மந்திரி லுசிஸ் விதேகார்யா பேசுகையில், இதுபோன்ற வரிவிதிப்பானது அமெரிக்க நுகர்வோர்களுக்கு அதிகமான செலவாகும், அவர்களே தடுப்புச் சுவருக்கான செலவை கட்டும் நிலையில் முடியும், என்று கூறிஉள்ளார்.

Next Story