ரஷிய அதிபர் புதினுடன் பேசிய டிரம்ப் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிப்பது குறித்து ஆலோசனை


ரஷிய அதிபர் புதினுடன் பேசிய டிரம்ப் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிப்பது குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 29 Jan 2017 5:19 AM GMT (Updated: 2017-01-29T10:49:37+05:30)

அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் முதல் முறையாக ரஷிய அதிபர் புதினுடன் டெலிபோனில் பேசிய டொனால்டு டிரம்ப் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிப்பது குறித்து ஆலோசித்து உள்ளார்.

வாஷிங்டன், 


 அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20–ந் தேதி பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இஸ்லாமிய நாட்டவர்கள் மீதான அவருடைய பார்வையானது பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
 
அதிபர் தேர்தலுக்கு முன்னதாகவே டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமீர் புதினிடம் காட்டிய நெருக்கமானது பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. டொனால்டு டிரம்ப், விளாடிமீர் புதின் புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் சித்தரித்து பொதுமக்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். டொனால்டு டிரம்ப் வெற்றி குறித்து அந்நாட்டு மக்களே குழப்பத்தில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் தேர்தல் விவகாரத்தில் ரஷியாவின் தலையீடு இருந்ததாகவும் அந்நாட்டு உளவுப்பிரிவு குற்றம் சாட்டியது.
 
இப்போது அதிபராக பதவி ஏற்றபின் முதன் முறையாக ரஷிய அதிபர் விளாடிமீர் புதினுடன் டெலிபோனில் டொனால்டு டிரம்ப் பேசினார். 

பதவியேற்ற பின்னர் டொனால்டு டிரம்ப், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு தலைவர்களுடன் டெலிபோனில் பேசினார். சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடியுடனும் டெலிபோனில் பேசினார். அப்போது ‘இந்தியா அமெரிக்காவின் உண்மையான நண்பன் என புகழாரம் சூட்டினார். இந்தநிலையில் பதவி ஏற்றபின் முதன் முறையாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நேற்று டெலிபோனில் பேசினார். இத்தகவலை ரஷிய அதிபரின் கிரம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

அதில் அப்போது அமெரிக்கா - ரஷியா ஆகிய 2 நாடுகளும் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது என்றும் குறிப்பாக   சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்  மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளை அடக்கி ஒடுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இப்பேச்சு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய கிழக்கு, அரபு மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை, ஈரான் அணுஆயுத திட்டம், வடக்கு மற்றும் தென்கொரியா பிரச்சினைகள் மற்றும் உக்ரைனின் தற்போதைய நிலை குறித்தும் விவாதித்தனர். 

முக்கியமாக சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒன்றுபட்டு செயல்பட இருநாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.


Next Story