டொனால்டு டிரம்ப் உத்தரவிற்கு நீதிமன்றம் தடை; மக்கள் போராட்டம் வலுக்கிறது


டொனால்டு டிரம்ப் உத்தரவிற்கு நீதிமன்றம் தடை; மக்கள் போராட்டம் வலுக்கிறது
x
தினத்தந்தி 29 Jan 2017 10:57 AM GMT (Updated: 2017-01-29T16:26:56+05:30)

அமெரிக்காவில் அதிபர் டொனால்டு ட்ரம்பின், அகதிகள் மற்றும் விசா தடை உத்தரவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் வலுத்து உள்ளது.

வாஷிங்டன், 
 
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் கடந்த 27-ந் தேதி அதிரடியாக சில நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். உலகின் எந்தவொரு நாட்டில் இருந்தும் வரும் அகதிகள், அமெரிக்காவில் நுழைவதற்கு 4 மாதம் தடை. சிரியா அகதிகள், குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் நிகழ்கிற வரையில், அதாவது மறு உத்தரவு பிறப்பிக்கிற வரையில் அமெரிக்காவினுள் நுழைய முடியாது. ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமா-லியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடு-களை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தம். 

இந்த நாடுகளில் தூதரக ரீதியிலான ராஜ்ய விசாக்களுக்கு மட்டும் தடை இல்லை என்று. டிரம்பின் இந்த அதிரடி உத்தரவுகள், சர்வதேச அரங்கில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. உள்நாட்டிலும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளன.

இந்த அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விசா தடை விதிக்கப்பட்டுள்ள 7 நாடுகளை சேர்ந்தவர்கள், வெளிநாடு சென்று விட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பியபோது, அவர்கள் விமான நிலையங்களில் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களை நாடு கடத்தி திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். முறையான விசா பெற்று அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிப்பதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பிரிட்டன், கனடா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவரும் டொனால்டு டிரம்ப் நடவடிக்கையை ஏற்கவில்லை. 

டொனால்டு டிரம்ப் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக நியூயார்க் சர்வதேச விமான நிலையம், வாஷிங்டன், சிகாகோ, சியாட்டில், அட்லாண்டா, பிலடெல்பியா, பாஸ்டன் விமான நிலையங்களில் நடந்த போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. டொனால்டு டிரம்ப் உத்தரவை அடுத்து, அதனை செயல்படுத்த அந்நாட்டு பாதுகாப்பு படை அதிகாரிகள் துரிதமாக அதனை செயல்படுத்த முற்பட்ட நிலையில் போராட்டம் வெடித்தது. 

இதற்கு இடையே டிரம்பின் உத்தரவுக்கு எதிராக நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் அமெரிக்க சிவில் உரிமை யூனியன் (ஏசிஎல்யு) சார்பில் நீதிபதி ஆன் டோனெலி முன்னிலையில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஆன் டோனெலி, டிரம்பின் உத்தரவுக்கு அதிரடியாக இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு, ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையான அகதி விண்ணப்பங்கள் வைத்திருப்பவர்கள், செல்லத்தக்க விசாக்கள் வைத்திருப்பவர்கள், சட்டபூர்வமாக அமெரிக்க வர தகுதியானவர்கள் ஆகியோர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவதற்கு தடையாக அமைந்துள்ளது.
இந்த தடை, டிரம்ப் உத்தரவு ஒன்றின்மீது அமெரிக்க கோர்ட்டில் விழுந்த முதல் அடியாக அமைந்துள்ளது.

இந்த உத்தரவை, அமெரிக்க சிவில் உரிமை யூனியன் வரவேற்று கருத்து தெரிவிக்கையில், டிரம்ப் அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும், சட்ட விரோதமாகவும் நிர்வாக உத்தரவுகள் பிறப்பித்தபோதும்கூட, அமெரிக்க ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரணாக நீதிமன்றங்கள் இருப்பதற்கு ஆதாரமாக, இந்த உத்தரவு அமைந்துள்ளது. மக்களின் உரிமைகளை இந்த கோர்ட்டுகள் காக்கும். பதவி ஏற்ற ஒரு வாரத்தில் டிரம்புக்கு நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள முதல் இழப்பு, இந்த உத்தரவு என கூறியது. கோர்ட்டின் தடை உத்தரவு, பல்வேறு தரப்பினரிடையே வரவேற்புக்கும், கொண்டாட்டங்களுக்கும் வழி வகுத்தது. 

டொனால்டு டிரம்ப் மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் எழுப்படும், அதற்கான செலவை மெக்சிகோவே கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மெக்சிகோ நிதி எதுவும் தரமுடியாது என திட்டவட்டமாக கூறியதும், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 சதவிதம் வரிவிதிக்கப்படும் என்றார். இதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இப்போது இஸ்லாமிய நாடுகள் மீது அவர் காட்டும் வேற்றுமையானது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

 டொனால்டு டிரம்ப் உத்தரவு குறித்து அமெரிக்க சிவில் உரிமை யூனியன் தலைவர் ஆண்டனி டி.ரொமிரோ பேசுகையில், இஸ்லாமியர்கள்   பெரும்பான்மை கொண்ட குறிப்பிட்ட நாடுகளை அடையாளப்படுத்தி, சிறுபான்மை மதத்தினருக்கு விதிவிலக்கு அளிப்பதன் மூலம் எந்த ஒரு மதப்பாகுபாடும் காட்டக்கூடாது என்ற அமெரிக்க அரசியல் சாசன விதிமுறைகளை ட்ரம்ப் மீறி உள்ளார். சுதந்திரா தேவி சிலை கண்களிலிருந்து கண்ணீர் கன்னத்தில் வழிகிறது. அகதிகளை அன்புடன் வரவேற்கும் மிகப்பெரிய பாரம்பரியம் கொண்டது அமெரிக்கா. அமெரிக்கா உருவான நாள் முதல் இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். டிரம்பிற்கு எதிர்ப்பு வலுத்து உள்ளநிலையில் ஹிலாரி கிளிண்டனும் மக்களின் போராட்டத்திற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து உள்ளார். 

Next Story