பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் குடியேற விரைவில் தடை விதிக்க வாய்ப்பு


பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் குடியேற விரைவில் தடை விதிக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 30 Jan 2017 4:44 AM GMT (Updated: 30 Jan 2017 4:44 AM GMT)

பாகிஸ்தான் நாட்டவர்களும் அமெரிக்கவில் குடியேற தடை விதிக்க டொனால்டு டிரம்ப் உத்தரவிடவுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20-ந் தேதி பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.முதலில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் கனவு திட்டமான ‘ஒபாமா கேர்’ என்னும் மலிவு கட்டண சுகாதார காப்பீடு திட்டத்தில், அரசின் நிதிச்சுமைகளை குறைப்பதற்கான வழிவகைகளை கண்டறியுமாறு நிர்வாக உத்தரவு பிறப்பித்தார்.

அடுத்த அதிரடியாக மெக்சிகோவில் இருந்து வந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவோரை தடுக்க 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு எல்லையில் தடுப்புச்சுவர் எழுப்ப உத்தரவிட்டுள்ளார். அடுத்த அதிரடி நடவடிக்கையாக எந்தவொரு நாட்டில் இருந்தும் அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை அண்மையில் பிறப்பித்திருக்கிறார்.

உள்நாட்டுப்போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை போட்டுள்ளார். அதாவது, அடுத்த அறிவிப்பு வரும் வரையில் சிரியா அகதிகள், அமெரிக்காவில் நுழைய முடியாது.

அடுத்து, ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றங்கள் உத்தரவுக்கு  இடைக்கால தடை விதித்துள்ளன.

இந்த நிலையில்,  முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 7 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற டிரம்ப் உத்தரவிடும் போது இந்த பட்டியலில் பாகிஸ்தானையும் இணைக்கலாமா? என்று டொனால்டு டிரம்ப் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் காலத்தில் பாகிஸ்தானுக்கும் இத்தகைய தடை விதிக்க வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் சூசகமாக தெரிவித்தனர்.

தற்போது, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருகை தரும் பயணிகள் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானிய வம்சாவளியினரும் நிரந்தர குடியுரிமைகொண்டவர்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story