ஹபீஸ் சயீத்துக்கு வீட்டுக்காவல்; சேத நலனுக்காக எடுக்கப்பட்ட கொள்கை முடிவு - பாகிஸ்தான் ராணுவம்


ஹபீஸ் சயீத்துக்கு வீட்டுக்காவல்; சேத நலனுக்காக எடுக்கப்பட்ட கொள்கை முடிவு - பாகிஸ்தான் ராணுவம்
x
தினத்தந்தி 31 Jan 2017 3:39 PM GMT (Updated: 31 Jan 2017 3:39 PM GMT)

பயங்கரவாதி ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது சேத நலனுக்காக எடுக்கப்பட்ட கொள்கை முடிவு என பாகிஸ்தான் ராணுவம் கூறிஉள்ளது.

இஸ்லாமாபாத்,

மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத். பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின், தாய் அமைப்பான ஜமாத் உத் தவாவின் தலைவரான இவனை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன. இவனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

 அமெரிக்கா இவனது தலைக்கு 10 மில்லியன் டாலர் விலை நிர்ணையித்துள்ளது. இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கும் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் உள்ளான். ஐ.நா.வும் கடந்த 2008-ம் ஆண்டு ஜமாத் உத் தவா அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. இந்த நிலையில் ஹபீஸ் சயீத் நேற்று இரவு அதிரடியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான். அவனது கூட்டாளிகள் 4 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜமாத் உத் தவா இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கா மற்றும் சீனாவின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஹபீஸ் சயீத் மற்றும் அவரது இயக்கத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைதுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டமும் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் இதுபோன்ற கண்துடைப்பு நாடகத்தையும் அவ்வபோது நடத்தி வருகிறது. 

இந்நிலையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ள பயங்கரவாதி ஹபீஸ் சயீத் தன்னுடைய கோபத்தை இந்திய பிரதமர் மோடியின் மீது காட்டிஉள்ளான்.“மோடியின் வலியுறுத்தல், டொனால்டு டிரம்பின் தூண்டுதலுக்கு பாகிஸ்தானி அரசு பணிந்துவிட்டது,” என்று கூறிஉள்ளான்.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மெஜர் ஜெனரல் ஆசிப் கபூர் பேசுகையில், “ஹபீஸ் சயீத் வீட்டுக்காவல் தேச நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு கொள்கை முடிவாகும். விரைவில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை விளக்கம் அளிக்கும் மற்றும் சூழ்நிலையானது தெளிவாகும்,” என்று கூறிஉள்ளார். இதற்கிடையே ஜமாத்-உத்-தவா கிளை அமைப்புகள் மீதும் நடவடிக்கையை தொடங்க அந்நாட்டு அரசு தரப்பு யோசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story