மலேசியாவில் கடலில் படகு கவிழ்ந்து மூழ்கியது; 13 பேர் பலி?


மலேசியாவில் கடலில் படகு கவிழ்ந்து மூழ்கியது; 13 பேர் பலி?
x
தினத்தந்தி 9 Feb 2017 9:09 PM GMT (Updated: 2017-02-10T02:39:02+05:30)

மலேசியாவில் இருந்து அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு 15 பேர் சிறிய படகு ஒன்றில் புறப்பட்டு சென்றனர்.

கோலாலம்பூர்

மலேசியாவில் இருந்து அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு 15 பேர் சிறிய படகு ஒன்றில் புறப்பட்டு சென்றனர். கடந்த 7–ந் தேதி இரவு இந்த படகு சாபா என்ற தீவுக்கு அருகே சென்ற போது திடீரென கடலில் கவிழ்ந்து மூழ்கியது.

ஆனால் இந்த விபத்து குறித்து மறுநாள் (8–ந் தேதி) இரவுதான் மலேசிய கடலோர காவல்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடலோர காவல்படையினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இருப்பினும் சுமார் 24 மணிநேர தாமதத்திற்கு பின்னர்தான் மீட்புபடையினர் விபத்து நடந்த பகுதியை கண்டறிந்தனர். அங்கு நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். அவர்கள் இருவரும் கணவன்–மனைவி என தெரிகிறது.

இவர்களை தவிர படகில் இருந்த மற்ற 13 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும் அவர்களில் யாரேனும் உயிருடன் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் தொடர்ந்து தேடல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.


Next Story