7 நாட்டினர் அமெரிக்கா வரலாம்: டிரம்ப் உத்தரவு மீதான தடையை நீக்க முடியாது அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு


7 நாட்டினர் அமெரிக்கா வரலாம்: டிரம்ப் உத்தரவு மீதான தடையை நீக்க முடியாது அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 Feb 2017 11:00 PM GMT (Updated: 10 Feb 2017 7:15 PM GMT)

7 நாட்டினர் அமெரிக்கா வர தடை விதித்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு சியாட்டில் கோர்ட்டு தடை விதித்தது. இந்த தடையை நீக்க முடியாது என அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

வாஷிங்டன்,

நிர்வாக உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 27–ந் தேதி அதிரடியாக சில நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த உத்தரவில் ஒன்று, அகதிகள் அமெரிக்காவினுள் நுழைய தடை விதித்தது. மற்றொரு உத்தரவு ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர தடையாக அமைந்தது.

இந்த உத்தரவுகளுக்கு எதிராக அமெரிக்காவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அமெரிக்க கோர்ட்டுகளில் வழக்குகளும் தொடரப்பட்டன.

கோர்ட்டு தடை

டிரம்பின் நிர்வாக உத்தரவுகளுக்கு எதிராக சியாட்டில் மத்திய கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கை நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் கடந்த வாரம் விசாரித்தார். அவர் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் தடை விதித்தார்.

இதன் காரணமாக அகதிகளும், தடை விதிக்கப்பட்ட 7 நாட்டினரும் அமெரிக்கா வர சட்டப்பூர்வமாக வழி பிறந்தது.

மேல்முறையீடு

ஆனால் தடைக்கு எதிராக டிரம்ப் சார்பில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள 9–வது மேல்முறையீடு சர்க்கியூட் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது சியாட்டில் கோர்ட்டு உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்ற டிரம்ப் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கு, 9–வது மேல்முறையீடு சர்க்கியூட் கோர்ட்டில் 3 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் நேற்று முன்தினம் முறைப்படி விசாரணைக்கு வந்தது. வாதங்கள் நடந்தன.

தீர்ப்பு

முடிவில் டிரம்ப் உத்தரவுக்கு சியாட்டில் கோர்ட்டு விதித்த தடையை நீக்க முடியாது என 3 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.

தீர்ப்பில் நீதிபதிகள், ‘‘7 நாடுகள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு காரணம், பயங்கரவாத அச்சுறுத்தல்கள்தான் என்பதை அரசு தரப்பில் நிரூபிக்க முடியவில்லை’’ என்று கூறி உள்ளனர்.

தடை விதிக்கப்பட்ட 7 நாடுகளை சேர்ந்த எந்தவொரு நபரும் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தியதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர்.

இந்த தீர்ப்பின் காரணமாக, 7 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவுக்கு வரலாம், இதுபோன்று அகதிகளும் அமெரிக்காவில் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு?

இந்த தீர்ப்புக்கு எதிராக டிரம்ப் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தீர்ப்பு தொடர்பாக அவர் டுவிட்டரில், ‘‘உங்களை கோர்ட்டில் பார்க்கிறேன்’’ எனவும் கூறி உள்ளார்.

எனவே இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் தரப்பில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.


Next Story