ஈராக் நாட்டில் குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரோடு எரித்து கொலை


ஈராக் நாட்டில் குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரோடு எரித்து கொலை
x
தினத்தந்தி 12 Feb 2017 7:41 PM GMT (Updated: 2017-02-13T01:11:31+05:30)

ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டுப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

பாக்தாத்,

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டுப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் அவர்களை முழுமையாக ஒடுக்க முடியவில்லை. இன்னும் பல நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளன.

கிர்குக் நகரில் இருந்து 55 கி.மீ. தென்மேற்கில் அமைந்துள்ள அல் ‌ஷஜரா கிராமமும் அவர்களது கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளது.

இந்த நிலையில் அங்கிருந்து குடிமக்கள் சிலர் தப்பி கிர்குக், சலாகுதீன் போன்ற இடங்களுக்கு நேற்று முன்தினம் ஓட்டம் எடுத்தனர். ஆனால் அவர்களில் சிலர் அல்ரியாத்–ஹம்ரீன் மலைப்பகுதியில் செல்வதை ஐ.எஸ். இயக்கத்தினர் பார்த்து விட்டனர்.

இதையடுத்து அவர்களை ஐ.எஸ். இயக்கத்தினர் பிடித்து, உயிரோடு எரித்து கொலை செய்து விட்டனர். குழந்தைகள் உள்பட மொத்தம் 15 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

மேலும், இனி யாராவது தப்பித்து ஓட முயன்றால், அவர்களும் உயிரோடு எரித்துக்கொல்லப்படுவார்கள் என ஐ.எஸ். இயக்கத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள் மீது தார் ஊற்றி தீ வைத்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த கொடூர செயல், கிர்குக் பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story