அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை


அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 13 Feb 2017 9:00 PM GMT (Updated: 2017-02-14T01:22:40+05:30)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் வசித்து வந்தவர் வம்சி சந்தர் ரெட்டி (வயது 27).

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் வசித்து வந்தவர் வம்சி சந்தர் ரெட்டி (வயது 27).

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இவர் எம்.எஸ்.சி. படிப்பிற்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். சிலிகான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இவர் தனது பட்ட மேற்படிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு செய்தார்.

அதன் பின்னர் அங்கு உள்ள ஒரு வணிகவளாகத்தில் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டு, தனது படிப்பிற்கு ஏற்ற வேலையை தேடிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வம்சி அவரது வீட்டுக்கு அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

வம்சி சந்தரின் மரணம் குறித்து நேற்று முன்தினம் காலையில்தான் தெலுங்கானாவில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதனை கேட்டதும் கதறி அழுது துடித்தனர்.

வம்சியின் தந்தை மோகன் ரெட்டி கூறுகையில், “வெள்ளிக்கிழமை அன்று அவன்(வம்சி) என்னிடம் தொலைபேசியில் பேசும்போது அமெரிக்காவின் புதிய அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளால் தனக்கு வேலை கிடைக்காமல் போய்விடுமோ என கூறி வருத்தப்பட்டான். அப்போது நான் வேலை கிடைக்காவிட்டால் பரவாயில்லை உடனே இந்தியா திரும்பி விடு என கூறினேன். ஆனால் இனி அவன் எப்போதுமே வரமாட்டான்” என வேதனையுடன் கூறினார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றுக்கொண்ட பின் அங்கு இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story