உலகிலேயே ஆபத்தான நாடு, பாகிஸ்தான் அமெரிக்க உளவுப்படை முன்னாள் அதிகாரி தகவல்


உலகிலேயே ஆபத்தான நாடு, பாகிஸ்தான் அமெரிக்க உளவுப்படை முன்னாள் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 Feb 2017 10:30 PM GMT (Updated: 16 Feb 2017 8:01 PM GMT)

உலகிலேயே ஆபத்தான நாடு, பாகிஸ்தான் என்று அமெரிக்க உளவுப்படையின் முன்னாள் உயர் அதிகாரி கூறி உள்ளார்.

வாஷிங்டன்,

உலகிலேயே ஆபத்தான நாடு, பாகிஸ்தான் என்று அமெரிக்க உளவுப்படையின் முன்னாள் உயர் அதிகாரி கூறி உள்ளார்.

உளவு அதிகாரி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், அமெரிக்க உளவுப்படையின் (சி.ஐ.ஏ.) நிலைய அதிகாரியாக பணியாற்றியவர் கெவின் ஹல்பெர்ட்.

இவர் அமெரிக்காவில் இயங்கி வருகிற உளவுப்படையினருக்கான ‘சைபர் பிரீப்’ என்ற இணையதளத்தில் பாகிஸ்தானைப் பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

உலகத்துக்கே பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடாக இருக்கக்கூடும்.

பாகிஸ்தானின் தோல்வி, உலகத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தோல்வி காணும் வங்கி போன்றது

பாகிஸ்தான் தோல்வியை சந்திக்கப்போகிற மிகப்பெரிய ஒரு வங்கியைப் போன்றதாகும் அல்லது மிகப்பெரிய தோல்வியை அனுமதிக்கும் மிகப்பெரிய வங்கியைப் போன்றதாகும். வங்கியை தோல்வி அடைய அனுமதிக்கிறபோது, அது நாட்டின் பொருளாதாரத்தின் மீது பேரழிவை ஏற்படுத்தி விடும்.

நமக்கு 3 கோடியே 30 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் பாகிஸ்தானில் 18 கோடியே 20 லட்சம் மக்கள் உள்ளனர். இது ஆப்கானிஸ்தானைப் போன்று 5 மடங்கை விட அதிகம்.

கவலை அளிக்கிற நாடு

சரிவை சந்தித்து வரும் பொருளாதாரம், பரவலான பயங்கரவாதம், அதிவேகமாக வளர்ந்து வரும் அணு ஆயுதம், உலகின் 6-வது பெரிய மக்கள் தொகை, உலகின் அதிகபட்ச பிறப்பு வீதம் கொண்ட ஒரு நாடு, இந்த வகையில் எல்லாம் பார்க்கிறபோது பாகிஸ்தான் பெரும் கவலையை அளிக்கிற நாடாக விளங்குகிறது.

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும், சர்வதேச நிதியமும் (ஐ.எம்.எப்.) கோடிக்கணக்கான டாலர்கள் நிதி உதவி செய்கின்றன.

நாம் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்து, அவர்களை நல்ல நடத்தையை நோக்கி வழிநடத்த முயற்சித்தும், அதில் ஓரளவுதான் வெற்றி பெற முடிந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

புதிதாக 16 விமானங்கள் சேர்ப்பு

இதற்கிடையே பாகிஸ்தான் தனது விமானப்படையில் நேற்று புதிதாக 16 ‘ஜே.எப்-17 தண்டர்’ போர் விமானங்களை சேர்த்துக்கொண்டது. ஏற்கனவே பாகிஸ்தான் விமானப்படையில் 70 ‘ஜே.எப்-17 தண்டர்’ போர் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களையும் சேர்த்து விமானப்படையில் ‘ஜே.எப்-17 தண்டர்’ போர் விமானங்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக அங்கு நடந்த நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப், விமானப்படை தளபதி சொஹைல் அமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 16 ‘ஜே.எப்-17 தண்டர்’ போர் விமானங்களை பாகிஸ்தானும், சீனாவும் கூட்டாக உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story