பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு: 7 பேர் பலி தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு: 7 பேர் பலி தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 22 Feb 2017 12:15 AM GMT (Updated: 2017-02-22T01:05:38+05:30)

பாகிஸ்தான் கோர்ட்டில் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பெஷாவர்,

பயங்கரவாத தாக்குதல்கள்

பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, நிதியும், ஆயுதமும் தந்து, பயங்கரவாதத்தை வளர்த்து விட்ட பாகிஸ்தான், இப்போது அதே பயங்கரவாதத்துக்கு களப்பலியாவது தொடர்கதை ஆகி வருகிறது.

கடந்த 16–ந் தேதி அங்கு செவான் நகரில் உள்ள லால் ஷாபாஸ் கலந்தர் வழிபாட்டு தலத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் புகுந்து, தன் உடலில் கட்டி எடுத்து வந்திருந்த சக்திவாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 100–க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 10 நாட்களில் சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துங்வா, பட்டா, பஞ்சாப் மாகாணங்களில் நடந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர்.

கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு

அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த வகையில், பெஷாவர் நகரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள டாங்கி நகரில் அமைந்துள்ள கோர்ட்டிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 3 பயங்கரவாதிகள் நேற்று காலையில் அந்த கோர்ட்டில் புகுந்து தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் களம் இறங்கினர். அவர்கள் கோர்ட்டு வளாகத்துக்கு வெளியே இருந்து, கோர்ட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், கையெறி குண்டுகளையும் வீசினர். இதனால் அங்கு இருந்தவர்கள் அலறியவாறு நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர். இருப்பினும் சிலர் ரத்தம் சொட்டச்சொட்ட வீழ்ந்தனர்.

7 பேர் பலி

அவர்களில் 7 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் வக்கீல் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அங்கிருந்த போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தங்களது துப்பாக்கிகளால் சரியான பதிலடி தந்தனர். இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலால் கோர்ட்டு வளாகமே போர்க்களம் போல மாறிப்போனது.

நீதிபதிகள் தப்பினர்

இந்த தாக்குதலின்போது கோர்ட்டு வளாகத்தில் இருந்த உள்ளூர்வாசி முகமது ஷா பாஸ் கூறுகையில், ‘‘பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது நானும் அங்குதான் இருந்தேன். அவர்கள் தாக்குதல் நடத்தத் தொடங்கியதும் கேண்டீனை நோக்கி ஓடினேன். அங்கிருந்த சுவர் மீது ஏறி உயிர் தப்பினேன்’’ என்று குறிப்பிட்டார்.

பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் கோர்ட்டு பகுதியை சுற்றி வளைத்தனர். பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 14 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள், ஆம்புலன்சுகளில் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாக்குதல் பற்றி உள்ளூர் போலீஸ் துணை கமி‌ஷனர் கூறும்போது, ‘‘நீதிபதிகளும், வக்கீல்களும் பாதுகாப்பாக உள்ளனர். பலத்த பாதுகாப்பு காரணமாக பயங்கரவாதிகளால் கோர்ட்டுக்குள் நுழைய முடியவில்லை. அவர்கள் கோர்ட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி இருந்தால் பயங்கர விளைவுகள் ஏற்பட்டிருக்கும்’’ என்று குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலுக்கு ஜமாத் உல் அக்ரார் என்ற பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.


Next Story