லாகூர் நகரில் அடுத்தடுத்து 2 ஓட்டல்களில் குண்டு வெடிப்பு; 8 பேர் பலி பயங்கரவாதிகள் கைவரிசை


லாகூர் நகரில் அடுத்தடுத்து 2 ஓட்டல்களில் குண்டு வெடிப்பு; 8 பேர் பலி பயங்கரவாதிகள் கைவரிசை
x
தினத்தந்தி 23 Feb 2017 9:45 PM GMT (Updated: 2017-02-23T22:22:07+05:30)

லாகூர் நகரில் நேற்று அடுத்தடுத்து 2 ஓட்டல்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 8 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 35–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இஸ்லாமாபாத், 

அலை அலையாய் தாக்குதல் 

கடந்த 2 வாரங்களாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அலை அலையாய் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆங்காங்கே குண்டுகளை மறைத்து வைத்து வெடிக்கச் செய்தும் பெரும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்துகின்றனர்.

கடந்த 13–ந் தேதி பஞ்சாப் மாகாண சட்டசபை அருகே பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் தெற்கு சிந்து மாகாணத்தில் சுபி வழிபாட்டு தலம் ஒன்றில் தற்கொலை படை தாக்குதல் நடத்தி 90 பேரை பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர்.

இதனால் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களிலும், ஆப்கானிஸ்தான் எல்லையோரம் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 130 பயங்கரவாதிகளை ராணுவம் வேட்டையாடியது.

8 பேர் பலி 

இந்த நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகரில் நேற்று அடுத்தடுத்து 2 ஓட்டல்களில் குண்டுகள் வெடித்தன. லாகூர் நகரில் ராணுவ வீட்டு வசதி ஆணையத்தின் கட்டிடம் அருகேயுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று காலை பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அந்த ஓட்டலில் இருந்த ஜெனரேட்டருக்குள் வெடிகுண்டை மறைத்து வைத்து அதை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளனர்.

இந்த பயங்கர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். 35–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பில் ஓட்டலின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்களும் அருகில் உள்ள கட்டிடங்களும் பலத்த சேதம் அடைந்தன. ஓட்டலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின.

மற்றொரு குண்டுவெடிப்பு 

இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் கிழக்கு லாகூர் நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த குல்பெர்க் பகுதியில் உள்ள இன்னொரு நட்சத்திர ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிர்சேதம் குறித்த விவரம் உடனடியாக தெரியவரவில்லை. எனினும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஏராளமானோர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமடாக உள்ளது.

நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த 2 தாக்குதல்களுக்கும் எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.

Next Story