அமெரிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய என்ஜினீயரின் மனைவி கேள்வி


அமெரிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய என்ஜினீயரின் மனைவி கேள்வி
x
தினத்தந்தி 25 Feb 2017 10:00 PM GMT (Updated: 2017-02-26T02:34:32+05:30)

இனவெறி தாக்குதல்களை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் மனைவி கேள்வி விடுத்தார்.

ஹூஸ்டன்,

இந்திய என்ஜினீயர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம், ஒலாத்தே என்ற இடத்தில் உள்ள கார்மின் என்னும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிபோட்லா (வயது 32), மதுபான விடுதி ஒன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த 22-ந் தேதி இரவு இனவெறியால் அவிழ்த்துவிடப்பட்ட இந்த வன்செயலில், அவரது இந்திய நண்பர் அலோக் மதசானியும், அமெரிக்கரான இயன் கிரில்லாட்டும் படுகாயம் அடைந்தனர்.

தாக்குதலை நடத்திய அமெரிக்க கடற்படை வீரர் ஆதம் புரிண்டன் (51) கைது செய்யப்பட்டார்.

மனைவி பேட்டி

இந்த நிலையில், கொல்லப்பட்ட சீனிவாஸ் மனைவி சுனயானா துமாலா, தனது கணவர் பணியாற்றிய கார்மின் நிறுவனத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “அமெரிக்காவில் நடந்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் கவலை அளிப்பதாக அமைந்துள்ளன. இனரீதியிலான தாக்குதல்கள், சிறுபான்மையினரை அச்சம் அடைய வைத்துள்ளது. அவர்களை, ‘அமெரிக்காவில் வாழ வேண்டுமா?’ என்று கேள்வி கேட்க வைத்துள்ளது. ஆனால் எனது கணவர் அமெரிக்காவில் நல்லது நடக்கும் என்ற உறுதியை எனக்கு அளித்துள்ளார்” என்று கூறினார்.

மேலும், “சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்படுகிற இத்தகைய தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?” என அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

இந்திய தூதரகம் நடவடிக்கை

தற்போதைய நிலைமையை ஹூஸ்டனில் உள்ள இந்திய துணைத்தூதர் அனுபம் ராய் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியின்போது, “இந்த சம்பவம் நடந்த உடனேயே துணைத்தூதரக உயர் அதிகாரி ஆர்.டி. ஜோஷியும், மற்றொரு உயர் அதிகாரியான எச். சிங்கும் கன்சாஸ் மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த புதன்கிழமை இரவு முதல், சீனிவாஸ் குடும்பத்தினருடன் அவர்கள் இருந்து உதவி வருகின்றனர். அத்துடன் சீனிவாஸ் மனைவி சுனயானாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாக அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்” என கூறினார்.

இந்த சம்பவத்தால் ஒலாத்தேயில் அதிர்ச்சி அடைந்துள்ள பிற இந்திய சமூகத்தினரையும் இந்திய தூதரக உயர் அதிகாரி ஜோஷி சந்தித்து பேசி, நம்பிக்கை ஏற்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிற சீனிவாஸ் நண்பர் அலோக்கையும் அவர் ஆஸ்பத்திரியில் சந்தித்து நலம் விசாரித்தார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுக்க முயன்று காயம் அடைந்த அமெரிக்கர் இயன் கிரில்லாட் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்.

இந்த சம்பவத்தில் அமெரிக்காவின் மத்திய உளவுப்படை எப்.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்க அரசு தரப்பில் இந்த சம்பவம், இனவெறி தாக்குதலா, இல்லையா என அறிவிக்கவில்லை. இருப்பினும் இது இனவெறி தாக்குதல்தான் என சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.

இந்திய எம்.பி.க்கள் வேதனை

இந்த சம்பவத்துக்கு இந்திய வம்சாவளி எம்.பி., கமலா ஹாரிஸ் கண்டனம் தெரிவித்தார். அவர், “ வெறுப்புணர்வு வெற்றி பெற விட்டு விட முடியாது. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அனுதாபங்கள்” என கூறினார்.

மற்றொரு இந்திய எம்.பி.,யான பிரமிளா ஜெயபால், “இந்த சம்பவத்தால் நான் மனம் உடைந்துபோனேன். அர்த்தமற்ற வன்செயல்களுக்கு அமெரிக்காவில் இடம் இல்லை” என்று கூறினார்.

வெள்ளை மாளிகை நிராகரிப்பு

அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்துள்ளோரைப் பற்றி டிரம்ப் கூறிய கருத்துகளையும், இந்த சம்பவத்தையும் தொடர்புபடுத்தி கூறப்படுவதை ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது.

“இது அபத்தமானது” என வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சீன் ஸ்பைசர் கருத்து தெரிவித்தார்.

Next Story