ஊழல் குற்றச்சாட்டின்பேரில் நடவடிக்கை கிர்கிஸ்தான் எதிர்க்கட்சித்தலைவர் கைது


ஊழல் குற்றச்சாட்டின்பேரில் நடவடிக்கை கிர்கிஸ்தான் எதிர்க்கட்சித்தலைவர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2017 10:31 PM GMT (Updated: 26 Feb 2017 10:31 PM GMT)

கிர்கிஸ்தான் நாட்டில் அதிபர் தேர்தல், வரும் நவம்பர் மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது.

பிஷ்கேக்,

கிர்கிஸ்தான் நாட்டில் அதிபர் தேர்தல், வரும் நவம்பர் மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் ஓமுர்பெக் டேகேபேயெவ் (வயது 58) ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளார்.

தந்தைதேசம் என்ற கட்சியினை நடத்தி வந்த இவர், தற்போதைய அதிபர் அல்மாஸ்பெக் ஆட்டம்பாயெவ்வை வெளிப்படையாக விமர்சித்து வந்தவர் ஆவார்.

துருக்கி நாட்டுக்கு போய் விட்டு நாடு திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் வைத்து ஓமுர்பெக் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

2010-ம் ஆண்டு ரஷிய நாட்டின் முதலீட்டாளர் ஒருவரிடம் இருந்து 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6 கோடியே 70 லட்சம்) லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின்பேரில் ஓமுர்பெக் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஓமுர்பெக் கட்சியின் எம்.பி., கானிபெக் இமாநலியெவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “ஓமுர்பெக் கைது செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. அது விரும்பத்தக்கதல்ல. ஒரு மாதத்தில் கட்சி மாநாட்டை கூட்டி நாங்கள் அவரை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க திட்டமிட்டிருந்தோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.


Next Story