கோலாலம்பூர் விமான நிலையம், பயணத்துக்கு பாதுகாப்பானது மலேசியா திட்டவட்டம்


கோலாலம்பூர் விமான நிலையம், பயணத்துக்கு பாதுகாப்பானது மலேசியா திட்டவட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2017 10:47 PM GMT (Updated: 2017-02-27T04:17:27+05:30)

கோலாலம்பூர் விமான நிலையம் பயணத்துக்கு பாதுகாப்பானது, அங்கு ரசாயன ஆயுதம் ஏதும் இல்லை என்று மலேசியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கோலாலம்பூர்,

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் அண்ணன் கிம் ஜாங் நாம் கொலை செய்யப்பட்ட கோலாலம்பூர் விமான நிலையம் பயணத்துக்கு பாதுகாப்பானது, அங்கு ரசாயன ஆயுதம் ஏதும் இல்லை என்று மலேசியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கிம் ஜாங் நாம் படுகொலை

வடகொரியா நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46), கோலாலம்பூர் விமான நிலையத்தில், 2 பெண்களால் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில், ‘விஎக்ஸ்’ என்னும் ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இதை பேரழிவு ஏற்படுத்தும் ரசாயன ஆயுதம் என கூறி ஐ.நா. சபை அறிவித்து, தடை செய்துள்ளது. இந்த ரசாயனத்தை கிம் ஜாங் நாமின் முகத்தில் அந்தப் பெண்கள் தேய்த்து அவரது நரம்பு மண்டலத்தை முடக்கி, சுவாசிக்க முடியாமல் தடை ஏற்படுத்தி கொன்று விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

விமான நிலையத்தில் பதற்றம்

இந்த ரசாயனத்தின் ஒரே ஒரு துளியைப் பயன்படுத்தி, ஒருவரின் நரம்பு மண்டலத்தை செயலிழக்க செய்து கொன்று விட முடியும் என விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

மேலும், கோலாலம்பூர் விமான நிலையத்தில் அபாயகரமான இந்த ரசாயனத்தைக் கொண்டுதான் கிம் ஜாங் நாம் கொல்லப்பட்டிருப்பதால், அது அந்த விமான நிலையத்தில் எங்கேனும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது சிதறி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் விமானப்பயணிகள் இடையே ஒரு இனம்புரியாத பதற்றம் நிலவியது.

மந்திரி உறுதி

இந்த நிலையில், மலேசியாவில் இதுவரை ‘விஎக்ஸ்’ ரசாயனம் காணப்பட்டதே கிடையாது என மலேசியா உறுதிபடத் தெரிவித்தது.

இதுபற்றி அந்த நாட்டின் சுகாதாரத்துறை துணை மந்திரி தாதுக் செரி டாக்டர் ஹில்மி யாஹயா நேற்று நிருபர்களிடம் பேசும்போது, ‘‘இப்போதுதான் மலேசியாவில் முதல்முறையாக ‘விஎக்ஸ்’ ரசாயனம் பற்றி கேள்விப்படுகிறோம். மலேசியாவில் ஒருபோதும் அந்த ரசாயனம் இருந்தது இல்லை. இந்த ரசாயனம், ஒருவரை அரை மணி நேரத்திற்குள் கொன்று விடும். வெளிநாடுகளில் இருந்து இந்த ரசாயனத்தை மிகக்குறைந்த அளவு இங்கே கொண்டு வந்திருந்தால் அதை கண்டுபிடிப்பது கடினமானது’’ என கூறினார்.

விமான நிலையம் தூய்மையானது

இதற்கிடையே கிம் ஜாங் நாம் கொல்லப்பட்ட கோலாலம்பூர் விமான நிலையத்தை (கேஎல்ஐஏ–2) போலீஸ் தடயவியல் வல்லுனர்கள் குழுவினர், தீயணைப்பு படையினர், அணுசக்தி உரிம வாரியத்தினர் முழுமையாக சுத்தம் செய்தனர். இந்தத் தூய்மைப்படுத்தும் பணி உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 1 மணிக்கு முடிந்தது.

இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி அப்துல் சமது மேட், கோலாலம்பூர் விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘‘கோலாலம்பூர் விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ–2) ஆபத்தான எந்தவொரு பொருளும் காணப்படவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அடுத்ததாக, இங்கு அபாயகரமான எந்தவொரு மாசும் கிடையாது. இந்த விமான நிலையம், பாதுகாப்பான பிரதேசம் என்பது பிரகடனம் செய்யப்படுகிறது’’ என்று கூறினார். அதாவது இந்த விமான நிலையம் பயணத்துக்கு பாதுகாப்பானது என்பது உறுதியாகி உள்ளது.

பதற்றம் வேண்டாம்

இதையடுத்து கோலாலம்பூர் விமான நிலையத்தில் பயணிகள் பதற்றம் அடைய ஏதுமில்லை என்பது தெளிவாகி உள்ளது. கிம் ஜாங் நாம் படுகொலையைத் தொடர்ந்து வடகொரியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பதற்றமும் நிலவுவதால் வடகொரியாவின் பியாங்யாங் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிவிடுவது குறித்து மலேசியா பரிசீலிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


Next Story