விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர முடியாதது ஏன்?


விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர முடியாதது ஏன்?
x
தினத்தந்தி 26 Feb 2017 11:14 PM GMT (Updated: 2017-02-27T04:43:59+05:30)

விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பது பற்றி லண்டனில் அருண்ஜெட்லி விளக்கினார்.

லண்டன்,

ரூ.9,380 கோடி கடன் வாங்கி விட்டு, இங்கிலாந்துக்கு தப்பிய விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியா கொண்டுவர முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பது பற்றி லண்டனில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி விளக்கினார்.

விஜய் மல்லையா தப்பினார்

நாடறிந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் 1.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரத்து 380 கோடி) கடன் வாங்கிவிட்டு, வட்டியுடன் திருப்பி செலுத்தவில்லை. அவர் நைசாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந்தேதி இங்கிலாந்துக்கு தப்பி விட்டார். அவர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்து, தன் மீதுள்ள வழக்குகளை எதிர் கொள்வதற்கு மறுத்து விட்டார்.

நாடு கடத்த வேண்டுகோள்

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று இங்கிலாந்து நாட்டு அரசிடம் இந்திய அரசு முறைப்படி வேண்டுகோள் விடுத்தது.

இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே 1993-ம் ஆண்டுமுதல் கைதிகளை நாடு கடத்திக்கொள்வதற்கான ஒப்பந்தம் உள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தத்தின்கீழ் குஜராத் கலவர வழக்கில் தொடர்புடைய சமிர்பாய் வினுபாய் பட்டேல் என்பவர் மட்டும்தான் இதுவரையில் இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்திக்கொண்டு வரப்பட்டார்.

ஆனால் விஜய் மல்லையா விஷயத்தில் இதுவும் பலன் அளிக்கவில்லை.

அருண் ஜெட்லி சூசக பேச்சு


இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி லண்டனில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்கு அவர் தெற்காசிய மையத்தில் லண்டன் பொருளாதார கல்லூரி நடத்திய கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பிச்செலுத்தாமல் லண்டனில் பதுங்கி விட்டதை சூசகமாக குறிப்பிட்டார்.

அவர் கூறியதாவது:-

உங்களில் பலர் வங்கிகளில் கடன் வாங்கும்போது, அந்த பணத்தை திருப்பிச்செலுத்த தேவையில்லை என்று நினைத்து விடுகிறீர்கள். நீங்கள் லண்டனுக்கு வந்து விட முடிகிறது. இங்கேயே தங்கி விடவும் இயல்கிறது.

தாராளமயமான ஜனநாயகம்

வாங்கிய கடன்களை திருப்பிச்செலுத்தாதவர்களை இங்கே தங்கிக்கொள்ள அனுமதிக்கிற வகையில் இங்கே ஜனநாயகம் தாராளமானதாக இருக்கிறது. இதை தகர்த்தெறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

உள்ளபடியே சொல்வதென்றால், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச்செலுத்தாமல் இப்படி ஒருவர் ஓட்டம் பிடித்தது இதுவரை நடக்காத ஒன்று. அவர் இப்படி ஓடி வந்து விட்டாலும், அவரது சொத்து கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. கடன்களை வாங்கிவிட்டு தப்பி ஓடி வந்துவிட்டால், சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்ற சமிக்ஞையை இந்தியா காட்டி இருப்பதும் இதுவே முதல் முறை. இல்லாவிட்டால், இப்படிப்பட்ட கடன்காரர்களுடன் நாம் வாழ்ந்து தொலைக்க கற்றுக்கொண்டிருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘இங்கிலாந்து வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட மூத்த மந்திரிகளை சந்தித்து பேசுகிறபோது, விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரம் குறித்தும் பேசும் திட்டம் உள்ளதா?’ என்பதை உறுதி செய்ய அருண் ஜெட்லி மறுத்து விட்டார். 

Next Story