அமெரிக்காவில் 46 அரசு வக்கீல்கள் பதவி பறிப்பு டிரம்ப் அரசு நடவடிக்கை


அமெரிக்காவில் 46 அரசு வக்கீல்கள் பதவி பறிப்பு டிரம்ப் அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 11 March 2017 8:07 PM GMT (Updated: 11 March 2017 8:07 PM GMT)

அமெரிக்காவில் 96 அரசு வக்கீல்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒபாமா அரசால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் 96 அரசு வக்கீல்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒபாமா அரசால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பலர் பதவி விலகினர். இன்னும் 46 அரசு வக்கீல்கள் பதவியில் தொடர்கின்றனர். அவர்களை பதவியை பறிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அவர்களை பதவி விலகுமாறு அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் உத்தரவிட்டுள்ளார். இதை நீதித்துறை செய்தித் தொடர்பாளர் சாரா இஸ்குர் புளோரஸ் உறுதிபடுத்தினார்.

இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “சீரான அதிகார மாற்றத்தை உறுதி செய்யும் விதத்தில் அரசு வக்கீல்கள் பதவி விலகுமாறு கூறப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

பதவி விலக உத்தரவிடப்பட்ட அரசு வக்கீல்களில் முக்கியமானவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத் பராரா ஆவார். பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் நியூயார்க்கில் பணியாற்றி வருகிறார். 2009-ம் ஆண்டு ஒபாமா அரசால் நியமிக்கப்பட்டவர். டிரம்ப், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரை பராரா சந்தித்து பேசினார். அவரை பதவியில் தொடருமாறு டிரம்ப் கேட்டுக்கொண்டார் என தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இப்போது அவரும் பதவி விலகுமாறு உத்தரவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

46 அரசு வக்கீல்களை பதவி விலகுமாறு டிரம்ப் அரசு கூறி இருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக செனட் சபை எம்.பி. சார்லஸ் சூமர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Next Story