அமெரிக்க நாட்டில் இந்தியரின் கடையை தீயிட்டு கொளுத்த முயற்சி


அமெரிக்க நாட்டில் இந்தியரின் கடையை தீயிட்டு கொளுத்த முயற்சி
x
தினத்தந்தி 12 March 2017 9:47 PM GMT (Updated: 12 March 2017 9:47 PM GMT)

அமெரிக்க நாட்டில் அண்மைக்காலமாக இனவெறி தாக்குதல்கள், பிற மதத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

வாஷிங்டன், 

அமெரிக்க நாட்டில் அண்மைக்காலமாக இனவெறி தாக்குதல்கள், பிற மதத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் கன்சாஸ் மாகாணத்தில் சீனிவாஸ் குச்சிபோட்லா என்ற இந்திய என்ஜினீயர் இனவெறி தாக்குதலுக்கு பலியானார். அதைத் தொடர்ந்து இந்தியப்பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் இனவெறி தாக்குதலுக்கு ஆளானார்.

இந்த நிலையில், அங்கு புளோரிடா மாகாணத்தில் செயிண்ட் லூசி கவுண்டியில் இந்தியர் ஒருவர் வீட்டு உபயோகப்பொருட்களை விற்பனைசெய்யும் கடையை நடத்தி வருகிறார். அந்த கடையை 64 வயதான அமெரிக்கர் ரிச்சர்டு லாயிட் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று தீயிட்டுக்கொளுத்த முயற்சித்து பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது அவர், இந்தியர் நடத்தி வந்த கடையை அரபு நாட்டை சேர்ந்தவர் கடை என கருதி தீயிட்டுக்கொளுத்த முயற்சித்ததாக தெரிவித்தார். இதை அந்த நகர ஷெரீப் கென் மஸ்காராவும் உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ரிச்சர்டு லாயிட் நல்ல மனநிலையில்தான் உள்ளாரா, அவரது குற்றம் வெறுப்புணர்வு குற்றம்தானா என்பது பற்றி மாகாண அட்டார்னி ஜெனரல் அலுவலகம் ஆராய்ந்து தெரிவிக்கும்” என்று தெரிவித்தார். இந்த சம்பவம், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story